மலேசியாவில், மொத்த மக்கள்தொகையில் 42.4 விழுக்காடு அல்லது 13,842,928 தனிநபர்கள், நேற்றைய நிலவரப்படி இரண்டு மருந்தளவு கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் சிறப்பு குழு (ஜே.கே.ஜே.ஏ.வி.) தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 18,792,979 பேர் அல்லது 57.5 விழுக்காட்டினர் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், இதனால் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டம் (பிக்) மூலம் தற்போது 32,635,907 தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கிடைத்துள்ளது என்று ஜே.கே.ஜே.ஏ.வி. அதன் அதிகாரப்பூர்வக் கீச்சகப் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளது.
தகவல் பகிர்வின் படி, திங்களன்று 58 விழுக்காடாக இருந்த பெரியவர்களில் இரண்டு மருந்தளவுகளைப் பெற்றவர் எண்ணிக்கை நேற்று 59.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், தினசரி தடுப்பூசி அளவு, திங்களன்று (420,164) ஒப்பிடும்போது, நேற்று மீண்டும் 423,380 மருந்தளவாக அதிகரித்துள்ளது, அவற்றில் 261,994 இரண்டாவது மருந்தளவுகள் மற்றும் மீதமுள்ளவை 161,386 முதல் மருந்தளவுகள் ஆகும்.
பிப்ரவரி 24-ம் தேதி, நாடு முழுவதும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தடுப்பூசிகளை வழங்கும் ‘பிக்’ திட்டம் தொடங்கப்பட்டது.
- பெர்னாமா