பிஎம்-பிஎச் சந்திப்பு : நாட்டின் அரசியல் நிலத்தோற்றத்தை மாற்றக்கூடும் – லோக்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர்கள் இடையேயான சந்திப்பு, மலேசிய அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வாகும், ஒருவேளை உறுதியுடன் பின்பற்றப்பட்டால், என்று டிஏபி தேசிய அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

“இந்தச் சந்திப்பு நம் நாட்டின் அரசியல் நிலத்தோற்றத்தையும் கலாச்சாரத்தையும் மாற்றும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது, இந்தக் கூட்டத்தின் உணர்வை அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களையும் புதுமைகளையும் கொண்டுவருவதற்கும், நாடாளுமன்ற நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகளிலும் பின்பற்ற வேண்டும்.

“அரசாங்கக் கட்சி எதிர்க்கட்சியை வெறும் அரசியல் எதிரியாக அல்லது எதிர்மாறாக பார்க்கும் பழைய முன்னுதாரணத்தை மாற்ற வேண்டும்.

“இரு கட்சிகளுக்கும் அந்தந்தப் பாத்திரங்கள் உள்ளன, ஒத்துழைப்பு இருக்க வேண்டும், இருப்பினும் நாங்கள் தேர்தலில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொள்வோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

நேற்று, இஸ்மாயில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை சந்தித்தார்; அமானா தலைவர் முகமது சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரும் அந்த ஒரு மணி நேரச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதன்பின் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், மலேசிய நாடாளுமன்றம் பொறுப்பான மற்றும் ஆக்கபூர்வமான நிறுவனமாகச் செயல்படுவதை வலுப்படுத்துவது, நிர்வாகத்தை மறுஆய்வு செய்வது மற்றும் சமநிலைப்படுத்துவதில் உடன்பாடு எட்டப்பட்டதாக அவர்கள் கூறினர்.

நீதித்துறையின் சுதந்திரம், நிறுவனச் சீர்திருத்தம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

“கூட்டு அறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்ட உணர்வை, எப்படி உணர்ந்து கொள்வது என்பதுதான் இப்போது அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ள சவால்.

“இரு தரப்பினரும் ஒரு படி பின்வாங்கினால், நம் நாட்டில் நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு புரிதலை அடைய நமக்குப் போதுமான இடம் இருக்கிறது என்று நான் மிகவும் நம்புகிறேன்,” என்று லோக் கூறினார்.

நாட்டின் அரசியல் அமைப்பில், மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் கடமை அரசியல்வாதிகளுக்கு உள்ளது என்று லோக் கூறினார்.

“நாம் தலைமையைத் தயார்படுத்த வேண்டும், அதை ஒன்றாகச் செய்வோம் வாருங்கள்,” என்று அவர் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று, நாட்டின் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்ட இஸ்மாயில் சப்ரி, எதிர்க்கட்சிகளிடம் மிகவும் நட்பான அணுகுமுறையைக் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.