நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவை அறிவிக்கப்படும் – பிரதமர்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நாளை (வெள்ளிக்கிழமை), காலை 11 மணிக்குத் தனது அமைச்சரவை பட்டியலை அறிவிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழா வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

முன்னதாக, இஸ்மாயில் சப்ரி தனது அமைச்சரவை பட்டியலை அறிவிப்பார் என்று ஊகங்கள் பரவியது, இன்று பிற்பகல் அவரது முன்மொழிவுகளின் பட்டியலை மாட்சிமை தங்கியப் பேரரசர் அங்கீகரித்தார்.

இன்று காலை, பஹாங், குவாந்தானில் உள்ள இஸ்தானா அப்துல்அசிஸில், புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பட்டியலை அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஏற்றுக்கொண்டார்.

இதற்கு முன், அமைச்சரவை பதவிகளுக்கு பல்வேறு தரப்பினரின் பரப்புரை நடவடிக்கைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அஸ்ரஃப் வாஜ்டி துசுகி, இஸ்மாயில் சப்ரியின் அமைச்சரவையில், அம்னோ துணைத் தலைவர் முகமது ஹசானை நிதி அமைச்சராக நியமிக்க பரிந்துரைத்தார்.

இதற்கிடையில், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி, துணைப் பிரதமராக்கப்படாவிட்டால் இஸ்மாயில் சப்ரி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அச்சுறுத்தியதாக அம்னோ மற்றும் பெர்சத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அஸ்மினின் அரசியல் செயலாளர் முஹம்மது ஹில்மன் இடாம், இந்த அறிக்கையை மறுத்து, “இது முற்றிலும் பொய், தீங்கிழைக்கும் மற்றும் பொறுப்பற்ற செயல்,” என்று கூறினார்.

இஸ்மாயில் சப்ரியின் அமைச்சரவை, முஹைதீன் யாசினின் முந்தைய அரசாங்கத்திலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்காது என்ற சில எதிர்பார்ப்புகளும் உள்ளன.

அமைச்சரவை பட்டியல் நேற்று முன்வைக்கப்படவிருப்பதாக ஸ்டார் செய்தித்தளம் முன்பு தெரிவித்தது, ஆனால் யாங் டி-பெர்த்துவான் அகோங் கோலாலம்பூரில் இல்லாததால், இன்றைக்கு அது ஒத்திவைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 31-ம் தேதி, சுதந்திரத் தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக அமைச்சரவை பட்டியலை இறுதி செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அது தெரிவித்தது.

அமைச்சரவை பட்டியல், மாமன்னரிடம் வழங்கப்பட்ட பிறகு, பதவியேற்பு விழா விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.