திங்கள் முதல் பி.கே.சி. உதவிதொகை வழங்கப்படும் – பிரதமர்

கோவிட் -19 சிறப்பு உதவிதொகையின் (பி.கே.சி.) முதல் கட்ட தொகை, வரும் திங்கள்கிழமை முதல் செலுத்தப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

செப்டம்பர் 6 -ம் தேதி தொடங்கி, கட்டங்கட்டமாகச் செலுத்தப்பட்டு, செப்டம்பர் 10 -ம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

ஏழைகள், பி40 மற்றும் எம்40 குழுவினர் மற்றும் தகுதி வாய்ந்த தனிநபர்கள் அடங்கிய 10 மில்லியன் பெறுநர்களுக்குப் பி.கே.சி. பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பி.கே.சி. உதவி தாமதமாகச் செலுத்தும் பிரச்சினையை நான் கவனித்தேன், இது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், எனவே பி.கே.சி. உதவிதொகையை விரைவுபடுத்த நிதி அமைச்சை நான் அறிவுறுத்தினேன்.

“இன்று, RM3.1 பில்லியன் தொகை, வங்கி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.

“முதல் கட்ட வரவு செப்டம்பர் 6, 2021-இல் தொடங்கி, செப்டம்பர் 10, 2021-இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

பி.கே.சி. என்பது மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்பு (பெமூலே-Pemulih) தொகுப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும், இது பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பிற்கான கூடுதல் கொடுப்பனவுகள் ஆகும்.

ஜூன் 28-ம் தேதி, கோவிட் தொற்றுநோயின் விளைவுகளைச் சமாளிக்க மக்களுக்கு விரிவான உதவிகளை வழங்குவதற்கான ஒரு முயற்சியாக புனர்வாழ்வு தொகுப்பை அரசாங்கம் அறிவித்தது.

பிரதமரின் கூற்றுப்படி, அடுத்த கட்டணம் குறிப்பிட்ட தகுதி வகைகள் மற்றும் கட்டங்களுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்.

“நான் எப்போதும் மக்களின் குறைகளை உணர்கிறேன், இந்தப் பி.கே.சி. கொடுப்பனவு கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்க முடியும் என்று நம்புகிறேன்.

“மலேசிய குடும்பங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது, குறிப்பாக இலக்கு வைக்கப்பட்ட குழுக்கள்,” என்று அவர் கூறினார்.