சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, கோல லங்காட் உத்தாரா வனக்காப்பு (எச்.எஸ்.கே.எல்.யூ.) விலக்குதலை இரத்து செய்ய தவறினால், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரைப் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) முன்மொழிந்துள்ளது.
இன்று ஓர் அறிக்கையில், பிஎஸ்எம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நெருக்கடி பிரிவு தலைவர் டாக்டர் டேரன் ஓங் சுங் லீ, வனத்தைப் பாதுகாப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் சிலாங்கூர் மாநிலச் சட்டசபையின் ஒருமனதான தீர்மானத்தை அமிருடின் மதிக்கவில்லை என்று கூறினார்.
கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட முடிவு, மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது; வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் காலநிலை நெருக்கடி குறித்த அக்கறை மற்றும் பூர்வக்குடிகளின் உரிமைகளை மீறுதல் ஆகியவற்றைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்த விவகாரம் குறித்த பொது விசாரணையை இந்த முடிவு கேலி செய்கிறது, தொழிலதிபர்களிடம் பரப்புரை செய்வதற்காக வெளிப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் இதன்வழி புறக்கணிக்கப்பட்டன என்று ஓங் கூறினார்.
“நிச்சயமாக, சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில், திறமையான மந்திரி பெசார் வேட்பாளர்கள் நிச்சயமாக இருப்பார்கள்,” என்று ஓங் கூறினார்.
இதற்கிடையில், சிலாங்கூர் அரசாங்கம் தங்கள் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களை ஓங் வலியுறுத்தினார்.
“அவர்கள் அதனைச் செய்வதில் தோல்வியடைந்தால், பாஸ் மற்றும் அம்னோ தலைமையிலான மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட காட்டு மரங்களை வெட்டுதல் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை விமர்சிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளையும் அவர்கள் இழந்துவிட்டனர்,” என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 30-ம் தேதி நடந்த சிலாங்கூர் ஆட்சிகுழு அமர்வின் கேள்வி பதில் அங்கத்தின் போதுதான், மே மாதம் தயாரிக்கப்பட்ட எச்.எஸ்.கே.எல்.யூ.-இன் வனக்காப்பு விலக்கு வெளிப்பட்டது.
மே 5-ம் தேதி, 17/2021-வது மாநில நிர்வாக மன்ற (எம்.எம்.கே.என்.) கூட்டத்தில், முடிவு எட்டப்பட்ட பிறகு, இந்த விலக்கு செய்யப்பட்டது; சிலாங்கூர் மாநில வனவியல் சட்டம் 1985, (விண்ணப்பம்) பிரிவு 12 சட்டத்தின் கீழ், மே 19-ம் தேதி, 18-வது எம்.எம்.கே.என். கூட்டத்தில், 536.70 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய இது உறுதிப்படுத்தப்பட்டது,.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கோல லங்காட் உத்தாரா நிரந்தர வனக் காப்பகத்தை மேம்படுத்த இரண்டு நிறுவனங்கள் – திதியான் ஜூதாரியா சென். பெர். (Titian Jutaria Sdn Bhd) & மெந்தெரி பெசார் இன்கோபரெடட் சிலாங்கூர் (Menteri Besar Incorporated Selangor) (எம்.பி.ஐ. சிலாங்கூர்) – முன்மொழிந்ததாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.