பினாங்கு மாநிலச் சட்டமன்றம், பினாங்கு மாநில அரசியலமைப்பு சட்டம் (திருத்தம்) மசோதா 2021, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர்களுக்கான வயது வரம்பை 21 -லிருந்து 18-ஆகக் குறைத்தது.
மசோதாவைச் சமர்ப்பிக்கும் போது, மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு குழு தலைவர் சூன் லிப் சீ, உலகெங்கிலும் உள்ள சமூக மற்றும் ஜனநாயக முன்னேற்றங்கள் காரணமாக, பினாங்கு இளைஞர்கள் 18 வயதிலேயே சட்டமன்ற வேட்பாளராகும் உரிமை வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
“பினாங்கு மற்றும் நாட்டின் சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியில், இளைஞர்களின் ஈடுபாடு மிகவும் தேவை. அவர்கள் நாட்டின் எதிர்காலத் திசையைத் தீர்மானிக்கும் தலைமுறையாக இருப்பதால் அவர்களுக்கு அரசாங்கக் கொள்கைகளில் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
“இந்த நடவடிக்கையால், தேர்தலின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை வடிவமைக்க ஒன்றாக வேலை செய்வதற்கான வாய்ப்பையும், இடத்தையும், குரலையும் கொடுக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
விரைவில் பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், மாநில அரசாங்கம் குடிமை மற்றும் ஜனநாயகப் பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் என்றும், அதனால் அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அடுத்தத் தேர்தலில் போட்டியிடும் சவால்களுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
“அரசியல் விழிப்புணர்வை அதிகரிக்கவும், இந்தக் குழுவின் கருத்துக்களையும் குரல்களையும் வலியுறுத்தவும் அவர்களுக்கு உகந்த வாய்ப்புகளும் தளங்களும் வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்தச் சட்ட மசோதா 40 சட்டமன்ற உறுப்பினர்கள் – எதிர்க்கட்சியினர் உட்பட – தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவுடன், 6 சட்டமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது.
இந்த முடிவைத் தொடர்ந்து, சபாவுக்குப் பிறகு (டிசம்பர் 2019) பினாங்கு மாநிலம் அரசியலமைப்பைத் திருத்திய ஏழாவது மாநிலமாக மாறியது; பெர்லிஸ் (மே 2020); திரெங்கானு (ஆகஸ்ட் 2020); சரவாக் (நவம்பர் 2020); கிளந்தான் (டிசம்பர் 2020) மற்றும் கடந்த ஜூலை மாதம் பேராக் ஆகிய மாநிலங்கள் மாநில அரசியலமைப்பைத் திருத்திய மாநிலங்களாக விளங்குகின்றன.
- பெர்னாமா