இந்த ஆண்டின் முதல் காலாண்டு நிலவரப்படி, புதிய வாக்காளர் பதிவு செயல்முறை குறைந்த விகிதத்தைக் காட்டியுள்ளது, சில பகுதிகளில் சரிவைக் காட்டியுள்ளது என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கூறினார்.
டிஏபி தேசிய அரசியல் கல்வி உதவி இயக்குநரான ஓங், தேர்தல் ஆணையத்தின் (எஸ்பிஆர்) பதிவின் புதுப்பிப்பில், கடந்த ஆண்டு நான்காம் காலாண்டில், 85,358 புதிய வாக்காளர்கள் இருந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 52,382 மற்றும் 44,321 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“இதன் பொருள், 2020-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு முதல், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை 182,061 புதிய வாக்காளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
“ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 500,000 குடிமக்கள் 21 வயதை அடைகின்றனர், அவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பெர்லிஸ் மற்றும் லாபுவானில், மூன்று காலாண்டுகளில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை சரிவு கண்டுள்ள வேளை, கெடா, பேராக், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் பினாங்கின் சில பகுதிகளில் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஓங் கூறினார்.
“குறைந்து வரும் புதிய வாக்காளர் பதிவு விகிதம், மலேசியாவில் வாக்களிக்க தகுதியுள்ள இளைய தலைமுறையினர், மலேசிய அரசியல் அமைப்பிலிருந்து துண்டிக்கப்படுகிறார்கள் என்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம்.
“உதாரணமாக, ஒரு வாக்காளராகப் பதிவு செய்ய, தபால் நிலையம் செல்வது குறித்து அவர்கள் பயப்படலாம்,” என்று அவர் கூறினார்.
ஓங்கின் கூற்றுபடி, பலர் வாக்காளர்களாகப் பதிவு செய்ய தகுதியுடையவர்கள், ஆனால், போதிய விளம்பரம் செய்யப்படாததால், ஆன்லைனில் பதிவு செய்யும் வசது உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வமுள்ள பிற குழுக்களும் பதிவை செய்ய முடியாது என்றார் அவர்.
மேலும், உயர்க்கல்வி மாணவர்கள் தங்கள் சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, வாக்காளர்களாகப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும், அத்துடன் சம்பந்தப்பட்ட குழுக்களை வாக்காளர் பதிவு செயல்முறையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“குடிமக்களாகிய நாம், 21 வயதை அடைந்த நண்பர்களையும் உறவினர்களையும் மைடாஃப்டார்எஸ்பிஆர் (laman web MyDaftarSPR) வலைத்தளத்தின் மூலம் உடனடியாக வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஊக்குவிக்கலாம்.
“இளைய தலைமுறையினர் உட்பட – வாக்காளர்களின் பரந்த ஈடுபாட்டால் மட்டுமே பொதுமக்கள் மாநில மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் பொறுப்பான மற்றும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய அரசியல் கட்சிகளுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முடியும்,” என்று அவர் கூறினார்.