12-வது மலேசியத் திட்டம் : செப்டம்பர் 27-ல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்

செப்டம்பர் 27-ம் தேதி, மக்களவையில் 12-வது மலேசியத் திட்டத்தை (ஆர்.எம்.கே.-12) பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விளக்குவார்.

பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தபா முகமது, 12-வது மலேசியத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் இப்போது கிட்டத்தட்ட 100 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகக் கூறினார்.

“பொருளாதாரத் திட்டப் பிரிவு (இபியு), ஆர்.எம்.கே.-12 குறித்த விளக்கத்தையும் சமீபத்திய தகவல்களையும் பிரதமருக்கு வழங்கும்,” என்று அவர் இன்று, புத்ராஜெயாவில் கூறினார்.

அது தவிர, தனது பதவி ஏற்பின் முதல் 100 நாள், ஆர்.எம்.கே.-12 விளக்கவுரை மற்றும் 2022 வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் கவனம் இருக்கும் என்றார் அவர்.

அவரைப் பொறுத்தவரை, ஆர்.எம்.கே.-12, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகளில், மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதார இடைவெளிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும்.

“சபா மற்றும் சரவாக் உட்பட, ஆறு பின்தங்கிய மாநிலங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், அந்த மாநிலங்களின் வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும்.

“அது தவிர, பி40, எம்40 மற்றும் தி20 குழுக்களுக்கு இடையிலான வருமான இடைவெளியிலும், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் நாங்கள் கவனம் செலுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

தண்ணீர், மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளை மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதையும் ஆர்.எம்.கே.-12 உறுதி செய்யும் என்று முஸ்தபா கூறினார்.