புதிய சுகாதார அமைச்சராக, கைரி ஜமாலுதீன், டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் பாராட்டைப் பெற்றார்; அந்த ரெம்பாவ் எம்.பி. “சரியான வழியில்” தனது நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யுமா லிம், கைரியின் வாக்குறுதி மிகவும் வெளிப்படையானது என்றும், கோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் சில முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக அமையும் என்று நம்புவதாகவும் சொன்னார்.
“ஒரு சுகாதார அமைச்சர் என்ற வகையில், மக்களுக்கு விரிவான கோவிட் -19 தகவல்களை வழங்கி, மிகவும் வெளிப்படையாக உறுதியளித்துள்ளதன் மூலம், கைரி சரியான வழியில் தனது பணியைத் தொடங்கியுள்ளார். சபா, ஜொகூர், கெடா, பினாங்கு மற்றும் கிளந்தான் ஆகிய கோவிட் -19 நேர்வுகள் அதிகரிப்பைப் பதிவு செய்த மாநிலங்களுக்கு, அதிக தடுப்பூசிகள், மனிதவளம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஒதுக்கீடு செய்வதன் மூலம் கோவிட் -19 செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளிலும் அவர் இறங்கியுள்ளார்,” என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இருப்பினும், மலேசிய சுகாதார அமைச்சின் பொறுப்பான ஓர் அமைச்சராக, நேற்று அவரின் முதல் செய்தியாளர் சந்திப்பில், கைரி குறிப்பிடாத ஓர் அவசர விஷயம் இருந்தது, புதிய நேர்வுகள் விகிதம் மற்றும் கோவிட் -19 காரணமாக அதிகரித்து வரும் தினசரி இறப்புகள் பற்றி அவர் பேசவில்லை.
ஜூன் 5-ஆம் தேதி, தேசியப் புனர்வாழ்வுத் திட்டம் (பிபிஎன்) அறிவிப்பு செய்யப்பட்ட அன்று, கோவிட் -19 காரணமாக 5,419 நேர்வுகள், 101 இறப்புகளை நாடு பதிவு செய்ததிலிருந்து, தினசரி நேர்வுகள் மற்றும் இறப்பு விகிதம் குறைவதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை.
“இதன் பொருள் பிபிஎன் அறிவிக்கப்பட்டதிலிருந்து, கோவிட் -19 நேர்வுகள் 2.64 மடங்கு அதிகரித்துள்ளது, இறப்புகள் 4.2 மடங்கு அதிகரித்துள்ளது,” என்று லிம் கூறினார்.
இருப்பினும், சுகாதார அமைச்சராக அவரது செயல்திறன் மதிப்பீடு செய்யப்படுவதற்கு முன்பு கைரிக்கு அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று லிம் மேலும் கூறினார்.
“கோவிட் -19 தொற்றுக்கு 14 நாட்கள் தனிமைபடுத்துதல் காலம் இருப்பதால், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதில் புதிய கொள்கைகள், உத்திகள் மற்றும் அணுகுமுறைகளைச் சுகாதார அமைச்சராக கைரி மதிப்பீடு செய்வதற்கு 14 நாட்கள் காத்திருப்பது நியாயமானது.
இந்த மாத இறுதிக்குள், மலேசியாவில் கோவிட் -19 நேர்வுகளும் இறப்புகளும் குறைய வாய்ப்புள்ளதா?
“புதிய சுகாதார அமைச்சராக நாம் கைரிக்கு ஒரு மாதம் வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, முன்னாள் காதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா, பொது தகவல் பரிமாற்றத்தின் போது அடிக்கடி தவறுகள் செய்ததால், பொது மக்களிடமிருந்து எதிர்மறையான எதிர்வினைகள் தோன்றியதன் விளைவாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவிடம் தகவல்களை வெளியிடும் பணி வழங்கப்பட்டது.
மற்றவற்றுடன், அடுத்த வாரம் தொடங்கி கோவிட் -19 தடுப்பூசிக்குப் பாதகமான எதிர்வினைகள் (பாதக விளைவுகள்) பற்றிய தகவல்களையும் வெளியிடுவதாக கைரி உறுதியளித்தார்.