அடுத்த வாரம் தொடங்கி, மலேசியாவில் கோவிட் -19 நிலைமை குறித்த விரிவான தரவுகளை அறிவிப்பதன் மூலம், வெளிப்படையான தகவல் பரிமாற்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உறுதியளித்தார்.
கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்கள் தெரிவிக்கும், “பாதகமான விளைவுகள்” பற்றிய அறிக்கைகளும் இதில் அடங்கும்.
அவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே நோய்த்தடுப்பு ஊசிக்குப் பிந்தைய பக்க விளைவுகளை (ஏ.இ.ஃப்.ஐ.) அனுபவித்ததாக தரவுகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.
கைரியின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 30 வரை கொடுக்கப்பட்ட 34.46 மில்லியன் தடுப்பூசிகளில், சுகாதார அமைச்சு ஒவ்வொரு 1,000 மருந்தளவுகளுக்கும் 0.53 ஏ.இ.ஃப்.ஐ. புகார்களைப் பெற்றது. 1,000 மருந்தளவில் 0.04 மட்டுமே தீவிர ஏ.இ.ஃப்.ஐ. என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான தீவிர வழக்குகளுக்கு, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிறிது காலம் மட்டுமே தேவைப்படுகிறது, மேலும் ஓர் இறப்பு கூட தடுப்பூசியுடன் தொடர்புடையது அல்ல.
“இருப்பினும், மக்களின் கவலையைப் போக்க, நான், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுடன் கலந்து பேசினேன்.
தலைவலி, காய்ச்சல் மற்றும் ‘த்ரோம்போம்போலிசம்‘ (இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைதல்) என – நீங்கள் அனைவரும் ஏ.இ.ஃப்.ஐ. வகையைச் சரியாகப் பார்க்கும் வகையில் அடுத்த வாரம் ஒரு விரிவான தரவை வெளியிடுவோம்.
“ஏ.இ.ஃப்.ஐ. தரவுகளில் வெளிப்படைத்தன்மைகாக, அடுத்த வாரம் முதல் உங்கள் அனைவருக்கும் நாங்கள் அதை (தரவை) வெளியிடுவோம் என உறுதியளிக்கிறேன்,” என்று கைரி நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.