இஸ்மாயில் சப்ரி யாகோப், துணைப் பிரதமரை நியமிக்காத முஹைதீன் யாசினின் நடவடிக்கையைத் தொடர்வது, அரசாங்கத்திற்கு நீண்ட கால நல்ல நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இஸ்மாயில் சப்ரியின் நகர்வை விளக்கி, சில அரசியல் ஆய்வாளர்கள் இது சரியான நடவடிக்கை என்றும், தற்போதைய நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றது என்றும் கருதுகின்றனர்.
மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஹாசன், அரசியல் சூடு தணியும் வரை, துணைப் பிரதமரின் நியமனத்தைப் பெரா எம்.பி தள்ளி வைப்பது நல்லது என்று கூறினார்.
“இஸ்மாயில் சப்ரி கடந்த கால அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம். முஹைதீன் பிரதமரானபோது, துணைப் பிரதமர் பதவி பல சிக்கல்களை ஏற்படுத்தியது.
“குறிப்பாக, துணைப் பிரதமர் பதவி புதிய அரசுக்கு மதிப்பு சேர்க்காதபோது. இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதனால் பயன் ஒன்றுமில்லை,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
முதலில், தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசு அமைக்கப்பட்டபோது, முஹைதீன் யாரையும் துணைப் பிரதமராக நியமிக்கவில்லை, மாறாக, இஸ்மாயில் சப்ரி உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூத்த அமைச்சர் பதவிகளை வழங்கினார்.
அம்னோவின் துணைத் தலைவரான அவர், பின்னர் ஜூலை 7-ஆம் தேதி, தே.கூ. அம்னோவின் அழுத்தத்தை எதிர்கொண்டபோது முஹைதீனின் துணையாக நியமிக்கப்பட்டார்.
சரியான நேரம் வரும்போது நியமிக்கவும்
துணைப் பிரதமராக ஒரு மாதத்திற்கு மேல் பதவியில் இருந்த பிறகுதான், பிரதமராகும் ‘பதவி உயர்வு’ அதிர்ஷ்டம் இஸ்மாயில் சப்ரிக்குக் கிடைத்ததாகக் கருதப்படுகிறார்.
இஸ்மாயில் சப்ரி நான்கு மூத்த அமைச்சர்களை நியமித்தது, பெர்சத்து தலைவர் முஹைதீன் கட்டிய கட்டமைப்பைப் பராமரிப்பதாகத் தெரிகிறது.
பெர்சத்துவில் திறன்மிக்க சில தலைவர்கள் இருக்கின்றனர், அவர்களை இஸ்மாயில் சப்ரிக்குத் துணையாக நியமிக்கலாம், ஆனால் அவர் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அது பிரதமருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று அஸ்மி கூறினார்.
“எனவே, இப்போதைக்கு அப்பதவி காலியாக இருப்பது நல்லது, பின்னர் பொருத்தமான நேரத்தில் ஒருவரை நியமிக்கலாம்,” என்று அவர் கூறினார்ரிதற்கிடையில், அரசியல் ஆய்வாளர் அன்புமணி பாலன் கூறுகையில், இஸ்மாயில் சப்ரின் துணையாக நியமிக்கப்படக்கூடிய மூத்தத் தலைவர்கள் பெர்சத்துவில் இருந்தும், அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது ‘பாதுகாப்பாக விளையாட’ அவர் முயற்சிப்பதைக் காட்டுகிறது என்றார்.
“என்னைப் பொறுத்தவரை, இஸ்மாயில் ஒரு பாதுகாப்பான விளையாட்டை விளையாட முயற்சிக்கிறார்,” என்று அவர் கூறினார்.
அன்புமணியின் கூற்றுப்படி, பெர்சத்து தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஜைனுடின் மற்றும் முன்னாள் பி.கே.ஆர். துணைத் தலைவர், இப்போது தே.கூ. தகவல் பிரிவுத் தலைவர் அஸ்மின் அலி போன்றவர்கள் அப்பதவிக்குத் தகுதியானவர்கள்.
“(இஸ்மாயில் சப்ரி) அரசாங்கம் நிலைத்தன்மை அடையும் வரை காத்திருந்து, பிறகு யாரையாவது நியமிப்பார்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, இஸ்மாயில் சப்ரிக்கு ஆதரவளித்த கட்சியின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப பெர்சத்து கட்சியில் உண்மையில் இரண்டாம் இடத்துக்கான போட்டி தொடங்கியதாக வதந்திகள் வந்தன.
முஹைதீன் 2.0 அமைச்சரவை
ஹம்சா மற்றும் அஸ்மின் தவிர, குறிப்பிடப்பட்ட மற்றொரு பெயர் பெர்சத்து தலைமை உச்சமன்ற உறுப்பினர், ரெட்ஸுவான் யூசோஃப்.
ரெட்ஸுவான், இஸ்மாயில் சப்ரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட, பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் ஆவார்.
பல பெர்சத்து எம்.பி.க்களால் ஆதரிக்கப்படுவதால், எதிர்காலத்தில் அஸ்மின் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான சிறந்த வாய்ப்பு இருப்பதாக அன்புமணி கூறினார்.
“அவர் ஒரு ‘கிங் மேக்கர்’ வேட்பாளர். ஒருவேளை பெர்சத்து மற்றும் அம்னோ இடையேயான பதட்டமான உறவின் காரணமாக, அஸ்மின் தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், இப்போதைய இஸ்மாயில் சப்ரியின் அமைச்சரவை, பெர்சத்துவின் தலைமைத்துவத்திலிருந்து தோன்றிய ஒரு ‘கண்ணுக்குத் தெரியாத கை’ மூலம் உருவாக்கப்பட்டது என்று அன்புமணி நினைக்கிறார்.
“இந்த புதிய அமைச்சரவை முஹைதீன் 2.0 அமைச்சரவை,” என்று அவர் கூறினார்.
யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியா அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் மூத்த விரிவுரையாளர், பேராசிரியர் டாக்டர் முகமட் அஸிசுடின் முகமட் சானி, இஸ்மாயில் சப்ரி ஒரு துணைப் பிரதமரை நியமிக்க மாட்டார், ஏனெனில் அதுதான் அவருக்கு நல்லது என்றார்.
“எந்த நியமனமும் இல்லாமல் இருப்பது நல்லது. மூத்த அமைச்சர்களை வைத்துகொண்டு முன்பு போல் இருங்கள், ஏனென்றால் துணைப் பிரதமரின் நியமனம் இருந்தால் உள்விவாதங்கள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
“முன்பு, அம்னோவுக்குத் துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது, ஆனால் அது மிகவும் தாமதமானது.
“அப்படியானால் எந்தத் துணைப் பிரதமரும் இல்லாமல் இருந்தால், ஒரு பிரச்சினையும் இருக்காது,” என்று அவர் கூறினார்.
இஸ்மாயில் சப்ரி அந்தப் பதவியை நிரப்ப விரும்பினால், துணைப் பிரதமர் பதவிக்குப் பெர்சத்து மற்றும் காபுங்கான் பார்டி சரவாக் (ஜிபிஎஸ்) இடையே மோதல்கல் ஏற்படும் என்றும் முகமட் அஸிசுடின் கணித்தார்.
“உண்மையில், பெர்சத்து கோரிக்கைகளை வைக்க உள்ளது, ஜிபிஎஸ்-உம் அதையே விரும்புகிறது. எனவே, அரசாங்கத்தின் உள் விவாதங்களுக்கு இது நல்லதல்ல,” என்று அவர் கூறினார்.
பாதுகாப்பாக ‘விளையாட’ முயற்சி செய்யுங்கள்
முன்னதாக, பார்டி ரக்யாட் பெர்சத்து சரவாக் (எஸ்.யு.பி.பி), இரண்டாவது துணைப் பிரதமர் (திபிஎம் II) பதவியை உருவாக்கும்படி மத்திய அரசை கேட்டுக்கொண்டது, ஜிபிஎஸ் எம்பி ஒருவரை அப்பதவியில் நிரப்ப.
துணைப் பிரதமருக்கான மற்றொரு இடம், மலேசியாவின் சம பங்காளிகள் என்ற நிலைக்கு ஏற்ப, சரவாக் அல்லது சபாவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எஸ்.யு.பி.பி. தலைமைச் செயலாளர் கருதுகிறார்.
மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன், ஒரு துணைப் பிரதமரை நியமிக்கும் துணிவு இஸ்மாயில் சப்ரிக்கு உண்மையில் இல்லை, ஏனெனில் அது அவரது நிலையைப் பாதுகாப்பற்றதாக மாற்றும்.
பிரதமராக, தனது பலவீனமான நிலைப்பாட்டைக் கொண்டு, இஸ்மாயில் சப்ரி, அதிகாரப் போட்டிகளைத் தவிர்க்க விரும்புவதாக அருட்செல்வன் கூறினார்.
“பாதுகாப்பாக விளையாடுவது மட்டுமே, இஸ்மாயில் சப்ரி தனது துணையைத் நியமிக்காததற்கு ஒரே காரணம் என்று தெரிகிறது. அவருடைய அமைச்சரவை தனித்து நிற்க முடியாது என்பதை அவர் பார்க்கிறார்.
“கடந்த காலத்தில், பிரதமராக இருந்தபோது, அதே காரணங்களுக்காக துணைப் பிரதமரை நியமிக்காத முஹைதீனிடமிருந்து அவர் கற்றுக்கொண்டார்,” என்று அவர் கூறினார்.
இதுவரையில், பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் பதவிகள் ஒரே கட்சியைச் சேர்ந்த தலைவர்களால் நிரப்பப்பட்டன, 2018-இல் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) பொதுத் தேர்தலில் வெல்லும் வரை என்று அருட்செல்வன் மேலும் கூறினார்.
அந்த நேரத்தில், பெர்சத்து தலைவர் நாடாளுமன்றத்தில், பிஎச் பெரும்பான்மை பெற்றபோது, டாக்டர் மகாதீர் முகமது பிரதமராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் அவருக்குத் துணையாக நியமிக்கப்பட்டார்.
மகாதீர் தற்போது பெஜூவாங் கட்சியின் தலைவராக உள்ளார்.
தேசிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது, தலைவர்களுக்கிடையில் பதற்றம் இருந்தபோதும் அம்னோ தலைவர்களால் இரண்டு பதவிகளும் நிரப்பப்பட்டன என்றார் அருட்செல்வன்.
“மலாய் அல்லாத எம்.பி.க்கள் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதை அம்னோ எப்போதும் நிராகரித்து வந்தது,” என்றும் அவர் கூறினார்.