ஹாடி, தியோங் மற்றும் ரியோட் அமைச்சர் அந்தஸ்தில், சிறப்பு தூதர்களாக இருப்பார்கள்

முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின் நியமித்தபடி, நாட்டின் அரசியல் கட்சிகளின் மூன்று தலைவர்களையும் பிரதமருக்கான சிறப்பு தூதர்களாக தக்கவைத்து கொள்ள மலேசிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இன்று ஓர் அறிக்கையில், செப்டம்பர் 1-ஆம் தேதி, முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மூன்று தலைவர்கள், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.டி.பி.) தலைவர் தியோங் கிங் சிங் மற்றும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் ரியோட் ஜீம் ஆவர்.

மாராங் எம்.பி.யான அப்துல் ஹாடி, மத்தியக் கிழக்கிற்கும், சீனாவுக்கு தியோங்கும் (பிந்துலு), கிழக்கு ஆசியாவுக்கு ரியோட்டும் (செரியான்) பிரதமரின் சிறப்பு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, மலேசியாவின் எட்டாவது பிரதமராக பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்ட பிறகு, அந்த மூன்று எம்.பி.க்களும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

முஹைதீனின் திட்டத்தின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால், சில தரப்பினரிடமிருந்து, குறிப்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து பெரும் விமர்சனங்களைப் பெற்றது.

அதே நேரத்தில், சில தரப்பினர் இந்த நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர், ஏனெனில் இது நாட்டின் வளர்ச்சிக்கு எந்தக் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் கொடுக்கபோவதில்லை என்று கருதப்படுவதால்.

அமைச்சர்களுக்கு இணையான நிலையில், புத்ராஜெயா அந்தப் பதவிக்குப் பெரிய ஒதுக்கீட்டைச் செலவழிப்பது குறித்து பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பினர்.

பிரதமரின் சிறப்பு தூதராக, அரசியல்வாதிகள் நியமிக்கப்பட தேவையில்லை என்று நினைக்கும் நபர்களில் அம்னோ உச்சமன்றச் செயற்குழு உறுப்பினர் முகமட் புவாட் ஜர்காஷியும் ஒருவர், இது அரசாங்க நிதியை வீணடிப்பதாக அவர் கருதுகிறார்.

“காவல்துறையின் பாதுகாப்பு சலுகையைத் தவிர, அவர்களின் பங்கு மற்றும் அதிகார வரம்புகள் என்ன?” என்று அவர் ஜூலை 11-ம் தேதி கேள்வி எழுப்பினார்.

பதிவுக்காக, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கமாக மாறியபோது, ​​கூட்டணி அரசியல்வாதிகளைச் சிறப்பு தூதர்களாக நியமித்தது.

உதாரணமாக, டிஏபி தலைவர், தான் கோக் வாய், சீனாவுக்கான மலேசியாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், தானின் நியமனம் அவரது பதவியை ஓர் அமைச்சர் பதவிக்குச் சமமாக கொண்டு வரவில்லை.

தேசிய முன்னணி அரசாங்கமாக இருந்தபோது, ​​பல பிரமுகர்கள் பிரதமருக்கான சிறப்பு தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.

உதாரணமாக, இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான உள்கட்டமைப்பு சிறப்பு தூதராக, முன்னாள் ம.இ.கா. தலைவர் எஸ் சாமிவேலு, முன்னாள் மசீச தலைவர் ஓங் கா திங் (சீனாவுக்கான சிறப்பு தூதர்) மற்றும் முன்னாள் தேசியக் காவற்படை தலைவர் காலிட் அபு பக்கார் (சீனாவுக்கான சிறப்பு தூதர்) நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.