மேலும் 7 #லாவான் ஆர்வலர்களைப் போலீசார் அழைத்தனர்

இரத்து செய்யப்பட்ட இரண்டாவது #லாவான் பேரணி தொடர்பாக மக்கள் ஒற்றுமை செயலகத்தின் (எஸ்எஸ்ஆர்) செயல்பாட்டாளர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசத்துரோகம் தொடர்பான விசாரணையில், கூடுதல் விளக்கங்களை வழங்க, நாளை, சனிக்கிழமை காலை 10 மணிக்கு, டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு (ஐபிடி) ஏழு ஆர்வலர்கள் அழைக்கப்பட்டதை வழக்கறிஞர் ராஜ்சுரியன் பிள்ளை உறுதிப்படுத்தினார்.

முகமது அஸ்ரப் ஷரபி முகமது அஸார், முகமட் அப்துல்லா அல்ஷத்ரி, கைய்ரா யுஸ்ரி, தர்மலிங்கம் பிள்ளை, டோபி சியு மற்றும் சாரா இர்டினா ஆகிய ஏழு ஆர்வலர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 13-ம் தேதி, இரண்டாவது #லாவான் ஆர்ப்பாட்டத்தைத் திட்டமிட்டதில் அவர்களின் பங்கு குறித்து விசாரிக்க காவல்துறையினர் அழைத்துள்ளனர்.

அப்போதைய பிரதமர் முஹைதீன் யாசினைப் பதவி விலகக் கோரி, ஜூலை மாதம் நடந்த முதல் பேரணியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ம் தேதி, மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அவர்கள் திட்டமிட்டிருப்பதாக எஸ்எஸ்ஆர் அறிவித்ததைத் தொடர்ந்து இது நடந்தது.

இருப்பினும், ஆகஸ்ட் 16-ம் தேதி, முஹைதீன் பதவி விலகியதை அடுத்து இரண்டாவது போராட்டம் இரத்து செய்யப்பட்டது.

தேசத்துரோகச் சட்டம் 1948, பிரிவு 4 -ன் கீழ், தேசத்துரோக உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காகவும், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233 வலைதொடர்பு வசதிகள் மற்றும் சேவைகளை முறையற்று பயன்படுத்தியதற்காகவும் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

டத்தாரன் மெர்டேகாவில், திட்டமிடப்பட்ட அந்தப் பேரணி குறித்து பொதுமக்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதனால், காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்ததாக ராஜ்சூரியன் முன்பு கூறியிருந்தார்.

இதற்கிடையில், காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியபோதெல்லாம் ஒத்துழைப்பு நல்கியதால், அவர்களை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை என்று கைய்ரா யுஸ்ரி கூறினார்.

“மேலும், தேசத்துரோகச் சட்டம் போன்ற காலனித்துவச் சட்டங்களை, இளம் ஆர்வலர்களை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும் பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

“ஒரே விசாரணைக்கு, எங்களை ஏன் இரண்டு முறை அழைக்க வேண்டும், இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது அவர்களின் திறமையற்ற போக்கைக் குறிக்கிறதா?” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கைய்ரா கேள்வி எழுப்பினார்.

ஆகஸ்ட் 19-ம் தேதி நடந்த முதல் #லாவான் பேரணிக்காக, எஸ்எஸ்ஆரைச் சேர்ந்த கைய்ராவும் அவரது சகாக்களும் முன்பு விசாரிக்கப்பட்டனர்.

கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக அவர்களுக்கு தலா RM 2,000 தண்டம் விதிக்கப்பட்டது.