மைசெஜாத்தெரா செயலி, நேற்றிரவு தொடங்கி பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது, இனி இதில் ஒருவரின் தடுப்பூசி நிலையை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும்.
சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பகிர்ந்த திரைகாட்சிகள் (ஸ்கிரீன் ஷாட்ஸ்) அடிப்படையில், திரையில் பயனர்களின் ‘செக்-இன்ஸ்’, அவர்களின் கோவிட் -19 ஆபத்து நிலை மட்டுமல்லாது, தடுப்பூசி நிலையையும் காட்டும்.
“மைசெஜாத்தெரா பணிக்குழு, நேற்று இரவு சீர்திருத்தங்கள் செய்தது, மக்கள் தங்கள் ஆபத்து மற்றும் தடுப்பூசி நிலையைக் குறிப்பிடுவதை இது எளிதாக்குகிறது. இது கோவிட் -19 தொற்றுடனான வாழ்க்கையை எளிதாக்கும்.
“அடுத்த சில வாரங்களில், இந்தச் செயலி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்,” என்று அவர் கீச்சகத்தின் மூலம் தெரிவித்தார்.
கூடுதலாக, பயன்பாட்டில் ‘செக் -இன்’ செயல்பாட்டை நிறைவு செய்ய, ஒரு ‘செக் -அவுட்’ பொத்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பு கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக என்று கைரி கூறினார்.
“ஓர் இடத்தை விட்டுச் சென்ற பிறகு, சரிபார்க்க மறக்காதீர்கள். நீங்கள் ஒரு பொத்தானை அழுத்த வேண்டும் – திரையிடத் தேவையில்லை,” என்று அவர் கூறினார்.
தடுப்பூசி நிலை முக்கியமானது, ஏனெனில் முழு தடுப்பூசி போடப்பட்டவர்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் அதிகச் சுதந்திரத்தை அனுபவிப்பார்கள்.
இருப்பினும், ஒருவரின் தடுப்பூசி நிலை தற்போது மைசெஜாத்தெரா பயன்பாட்டில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
அதற்குப் பதிலாக, ஒரு பயனரின் தடுப்பூசி சான்றிதழை ஆராய்வதற்கு திறன்பேசிகளில், திரைகாட்சியைப் பார்க்க சில படிகள் தேவை.
தற்போது, தடுப்பூசி வழங்கப்பட்ட தேதிகளை மட்டுமே சான்றிதழ் காட்டுகிறது, எனவே, சான்றிதழைச் சரிபார்க்கும் ஒருவர் நாள்களின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டியுள்ளது.
பதிவுக்காக, ஒருவர் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இது தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி முதிர்ச்சியடைய போதுமான நேரம் கொடுப்பதற்கான நடவடிக்கை ஆகும்.