‘தடுப்பூசியை ஏற்க மறுத்த 2,500 ஆசிரியர்களுக்கு வகுப்பறை கற்பித்தலில் அனுமதி இல்லை’

கோவிட் -19 தடுப்பூசியைப் பெற மறுத்த 2,500 ஆசிரியர்கள், அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளி அமர்வு தொடங்கும் போது, நேருக்கு நேர் கற்பித்தலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராட்ஸி ஜிடின் கூறினார்.

தடுப்பூசி போட விரும்பாத கல்வியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மூத்தக் கல்வி அமைச்சர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடன் தனது அமைச்சு பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட அமர்வுகளைத் தொடர்ந்து நடத்தும் என்று ராட்ஸி விளக்கினார்.

“பள்ளி திறக்கும் போது, ​​தடுப்பூசி போடப்படாத இந்த ஆசிரியர்களால் வகுப்பறையில் நேருக்கு நேர் கற்பிக்கவும் மாணவர்களுடன் தொடர்புகொள்ளவும் முடியாது.

“இருப்பினும், கல்வி அமைச்சு இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்களுக்கான பணி நியமன வழிகாட்டுதல்களை வெளியிடும். அதே நேரத்தில், இந்தத் தடுப்பூசி போடப்படாத ஆசிரியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் பொது சேவைத் துறையுடன் (ஜே.பி.ஏ.) விவாதிப்போம்,” என்று அவர் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் மேற்கோளிட்டுள்ளது.

கங்காரில், ஒரு ஹோட்டலில், பெர்லிஸ் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் ராட்ஸி இதனைக் கூறினார்.

குறிப்பாக, பள்ளியைத் திறப்பதற்கு முன்னதாக தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் அவர்.

“இந்த எண்ணிக்கை அதிகம் இல்லை, நாட்டில் உள்ள 400,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் ஒருசிலர். பள்ளியில் நம் குழந்தைகளை நாம் கவனித்துகொள்ள விரும்புகிறோம், பள்ளியின் சுற்றுச்சூழல் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது என்று பெற்றோர்கள் நம்ப வேண்டும்.

“உடல்நலப் பிரச்சினைகளால் தடுப்பூசி போட முடியாத ஆசிரியர்கள் சிலர் உள்ளனர்; அதேசமயம், இந்தத் தடுப்பூசியின் செயல்திறனை நம்பாதது போன்ற காரணங்களைக் கொடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள், அவர்கள் இந்தத் தடுப்பூசியைப் பெற மறுக்கிறார்கள்… பல்வேறு காரணங்களுடன்,” என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, மாநிலக் கல்வித்துறை (ஜே.பி.என்.) அல்லது மாவட்டக் கல்வி இலாகா (பிபிடி), ஆசிரியர்கள் கூறிய காரணங்களை ஆய்வு செய்து, பள்ளி சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தடுப்பூசிகளின் அவசியத்தை விளக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.