ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கும் நடவடிக்கை குறித்து, கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடினுடன் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கைரி, ஆசிரியர்களுக்குக் கோவிட் -19 தடுப்பூசியைக் கட்டாயமாக்கலாமா, அது தொடர்பான சட்டச் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
“நாம் கல்வி அமைச்சுடன் (கே.பி.எம்) கலந்துபேச வேண்டும், ஏனெனில் இது சட்டரீதியான தாக்கங்களையும் கொண்டுள்ளது.
“துறை அடிப்படையில் (ஆசிரியர்களுக்கு) கட்டாய நடவடிக்கை பற்றி, கல்வி அமைச்சருடன் நான் கலந்துபேச வேண்டும், அதனைக் கட்டாயமாக்கும் சாத்தியம் உண்டா, இல்லையா,” என்று அவர் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கைரி, தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற தனது கொள்கையை அரசாங்கம் இன்னும் கடைப்பிடித்து வருவதாகவும், அவற்றைப் பெற பொதுமக்களை ஊக்குவிக்கும் தனது அணுகுமுறையைத் தொடரும் என்றும் கூறினார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்குச் சில சலுகைகளை வழங்குவதும் இதில் அடங்கும்.
எவ்வாறாயினும், தொழிலாளர்கள் வேலையிடத்திற்கு வருவதற்கு நிபந்தனையாக, நிறுவனங்கள் தடுப்பூசியை வைக்கலாம், “துறை சார்ந்த வற்புறுத்தலை” தனது தரப்பு ஊக்குவிப்பதாக கைரி கூறினார்.
ஆசிரியர்கள் தடுப்பூசி போடுவதைப் பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தடுப்பூசிகளை நிராகரிப்பது கவலையை எழுப்புகிறது, குறிப்பாக பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ள வேளையில்.
ஏனென்றால், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாததால், கொரோனா கிருமிக்கு எதிரான பாதுகாப்பு அவர்களுக்கு இல்லை.
இப்பிரச்சனை சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுட்டின் இட்ரிஸ் ஷாவின் கவனத்தையும் ஈர்த்தது, அவர் நேற்று இது தொடர்பில் கவலை தெரிவித்தார்.
கட்டாயத் தடுப்பூசி அறிவுறுத்தல்களுக்கு உட்பட்ட பிற துறைகள் உள்ளதா என்று கேட்டபோது, பயணத் துறைக்கும் கட்டாயமாக்கப்படுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கைரி கூறினார்.
சுகாதார அமைச்சு (கே.கே.எம்.), அந்தந்த துறைகள் அல்லது நிறுவனங்களுக்கு இந்த விவகாரம் குறித்த முடிவைச் சமர்ப்பிக்கும் என்று அவர் கூறினார்.
“பயணத் துறை அதைப் பரிசீலிப்பதாக நான் நினைக்கிறேன். அந்தந்த துறை அல்லது நிறுவன மட்டத்தில் செயல்படுத்த வேண்டியது அவர்களுடைய பொறுப்பு,” என்றார் அவர்.
மாநில எல்லை கடந்த பயணம்
மாவட்ட, மாநில எல்லைகளைக் கடக்கும் பயணத்தை விரைவில் அனுமதிக்க, கே.கே.எம். அரசாங்கத்திடம் முன்மொழியக்கூடும் என்றும் கைரி சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தடுப்பூசி விகிதம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரியவர்களுக்கு 60 விழுக்காட்டை அடைந்த பின்னரே இதனைச் செய்ய முடியும் என்றார் அவர்.
நான் (இந்த விஷயத்தை) (சுகாதாரத் தலைமை இயக்குநர்) டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுடன் விவாதித்தேன். எங்களிடம் ஏற்கனவே ஒரு முன்மொழிவு உள்ளது, அதை விரைவில் தேசியப் பாதுகாப்பு மன்றத்திற்குக் கொண்டு செல்வோம்.
“நம்பிக்கை இருக்கிறது (அது அனுமதிக்கப்படும்). ஆனால், இன்னும் சிறிது நேரம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன், எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்,” என்று அவர் கூறினார்.