அமைச்சர் அந்தஸ்தில் பல சிறப்பு தூதர்களை, பிரதமருக்காக மீண்டும் நியமிப்பது நாட்டின் பணத்தை வீணடிக்கும் செயல் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) விமர்சித்துள்ளது.
பிஎஸ்எம் மத்தியச் செயற்குழு உறுப்பினர் சரண்ராஜ், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், இந்த நியமனம் பொது நிதியை வீணடிப்பதாக உள்ளது என்றார்.
“பிரதமருக்கான சிறப்பு தூதர் பதவியும், விஸ்மா புத்ரா மற்றும் மலேசிய வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள இராஜதந்திரிகள் பதவியும் ஒன்றுடன் ஒன்று இணைகிறது.
“பொருளாதார வீழ்ச்சியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோது, அரசியல்வாதிகளுக்கு இதுபோன்ற தேவையற்ற பணிகளை வழங்கி, வரி பணத்தை வீணாக்குவது நயவஞ்சகச் செயலாகும்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று, மலேசிய அரசாங்கம், நாட்டின் அரசியல் கட்சிகளின் மூன்று தலைவர்களை, பிரதமரின் சிறப்பு தூதர்களாக தக்கவைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டது, முந்தைய பிரதமர் முஹைதீன் யாசின் நிர்ணயித்தபடி.
செப்டம்பர் 1-ஆம் தேதி, முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மூன்று தலைவர்கள், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.டி.பி.) தலைவர் தியோங் கிங் சிங் மற்றும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் ரியோட் ஜீம் ஆவர்.
மாராங் எம்.பி.யான அப்துல் ஹாடி, மத்தியக் கிழக்கிற்கும், சீனாவுக்கு தியோங்கும் (பிந்துலு), கிழக்கு ஆசியாவுக்கு ரியோட்டும் (செரியான்) பிரதமரின் சிறப்பு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, மலேசியாவின் எட்டாவது பிரதமராக பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்ட பிறகு, அந்த மூன்று எம்.பி.க்களும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.
ம.இ.கா. தலைவர் பதவியை இராஜினாமா செய்வதில் சாமிவேலுவைச் சமாதானப்படுத்த, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிரதமருக்கான சிறப்பு தூதர் பதவியை அறிமுகப்படுத்தினார் என்று சரண் கூறினார்.
சாமிவேலு ஜனவரி 1, 2011-ல், பிரதமருக்கான முதல் சிறப்பு தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, டிசம்பர் 6, 2010-ல், ம.இ.கா. தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.
“பிரதமருக்கான சிறப்புத் தூதர் ஒரு மாதத்திற்கு ரிம 27,000 சம்பளத்தைப் பெறுகிறார். 2011-ம் ஆண்டு முதல், 8 தனிநபர்கள் கிட்டத்தட்ட 330 மாதாந்திர சம்பளமாக ரிம 9 மில்லியன் சம்பளத்தைக் திரட்டியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.