மலேசிய இஸ்லாமிய இளைஞர் படை (அபிம்), அமைச்சர் அந்தஸ்தில் தனிநபர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.
இன்று ஓர் அறிக்கையில், கடந்த ஆண்டு ‘ஷெரட்டன் நடவடிக்கை’க்குப் பின்னர், அமைச்சக அளவிலான நியமனங்கள் இப்போது நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது என்று அபிம் கவலை தெரிவித்தது.
“எனவே, இந்த நியமனம் தொடர்பான உண்மையான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் முன்வைக்க வேண்டும் என்று அபிம் பிரதமரையும் மலேசிய அரசாங்கத்தையும் வலியுறுத்துகிறது.
“இதில் தேவைகள், பொறுப்புக்கூறல் கொள்கை, நாடாளுமன்றத்தில் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுடன், நியமனங்களின் வரம்புகள் ஆகியவையும் அடங்கும். எந்த நியமனமும் வழங்கப்படுவதற்கு முன்பு, அரசாங்கம் மக்களுக்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்,” என்று அதன் தலைவர் முஹம்மது ஃபைசல் அப்துல் அஜீஸ் கூறினார்.
அதே நேரத்தில், நியமிக்கப்பட்டவர்கள் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (3)-இல் உள்ள “அமைச்சரவை பொறுப்பு” கோட்பாட்டில் கூறப்பட்டுள்ள பொறுப்புகளையும் “கூட்டுப் பொறுப்பு” கொள்கையையும் ஏற்க வேண்டும்.
“நீண்ட காலத்திற்கு, இந்த அமைச்சர் அந்தஸ்திலான நியமனம், பிரதமராவதற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு, அரசியல் ஆறுதலின் பரிசாக இருக்கும் என்றும், நிச்சயமாக நாட்டின் ஜனநாயக நடைமுறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அபிம் கவலைப்படுகிறது,” என்று அவர் சொன்னார்.
நேற்று, முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின் அமைச்சக அளவில், தேசியப் புனர்வாழ்வு மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
முஹைதீனைத் தவிர, அரசாங்கம் அமைச்சர் அந்தஸ்துடன் பல சிறப்பு தூதர்களையும் நியமித்தது.
இந்தச் செயல் அதிக விமர்சனங்களைப் பெற்றது, இது மக்களின் பணத்தை வீணடிக்கும் நடவடிக்கை என்று விவரிக்கப்பட்டது.