மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரியில் (எம்ஆர்எஸ்எம்) மாணவர் சேர்க்கைக்கான புதிய நிபந்தனைகள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைப் பெற்ற பிறகு, அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் அது திறந்திருக்கும் என்றும், பழைய விதிமுறைகள் பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் மஹ்ட்சீர் காலிட் கூறினார்.
“எம்ஆர்எஸ்எம் மாணவர் சேர்க்கைக்கான கொள்கை மற்றும் நிபந்தனைகளை நாம் முன்பு போலவே பழைய நிலையில் தக்கவைக்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
“எம்ஆர்எஸ்எம் மாணவர் சேர்க்கை சார்பு தேர்வு அடிப்படையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் (STEM) பாடங்கள் மற்றும் மாணவர்களின் ஆளுமை ஆகியவற்றைச் சோதித்து, மாணவர் சேர்க்கை நடைபெறும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
நேற்று, பல எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்ஆர்எஸ்எம்-க்கான புதிய நுழைவு நிபந்தனைகளுக்குத் – தேசிய இடைநிலைப் பள்ளி (SMK) மற்றும் தேசியப் பள்ளி (SK) மாணவர்களுக்கு மட்டுமே – தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மஹ்ட்சீரின் கூற்றுப்படி, பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்குப் 10 விழுக்காடு ஒதுக்கீடு கொள்கையும் முன்பு போலவே பராமரிக்கப்படும்.
ஒவ்வொரு வருடாந்திர சேர்க்கைக்கும், படிவம் ஒன்றுக்கு 7,500 மாணவர்களையும் படிவம் நான்குக்கு 2,000 மாணவர்களையும் மட்டுமே எம்ஆர்எஸ்எம்-இல் சேர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு பெறப்பட்ட 2022 சேர்க்கை அமர்வு விண்ணப்பங்களின் எண்ணிக்கை, படிவம் ஒன்றுக்கு 77,834-ஆகவும், படிவம் நான்குக்கு 24,495-ஆகவும் உள்ளது என்றார் அவர்.
பி40 குடும்பங்களில் உள்ள சிறந்த மாணவர்களுக்கு, எம்ஆர்எஸ்எம்-இல் படிக்க 60 விழுக்காடு ஒதுக்கீட்டை வழங்குவது மஜ்லிஸ் அமானா ரக்யாட்-இன் (மாரா) கொள்கை என்று மஹ்ட்சீர் கூறினார்.
பதிவுக்காக, நாடு முழுவதும் 55 எம்ஆர்எஸ்எம்-கள் உள்ளன, அவற்றில் 37,198 மாணவர்களுக்கு இடமளிக்க முடியும்.