இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தைப் பொம்மை போல ஆக்கினார் – கதிர்

தேசியப் புனர்வாழ்வு மன்றத்திற்குத் (எம்பிஎன்) தலைவராக முஹைதீன் யாசினை நியமித்த செயலைப், பிரதமரின் சமீபத்திய பொறுப்பற்ற நடவடிக்கையாக கருதி, இஸ்மாயில் சப்ரி உண்மையில் மக்களுக்கு சிறிதும் மரியாதை அளிக்கவில்லை என்று மூத்தப் பத்திரிக்கையாளர் ஏ கதிர் ஜாசின் கூறியுள்ளார்.

ஏ கதிரின் கூற்றுப்படி, பெர்சத்து தலைவருக்கு அப்பதவியை வழங்குவதன் மூலம், இஸ்மாயில் சப்ரி வேண்டுமென்றே மக்களின் உணர்வை இழிவுபடுத்தினார்.

“இஸ்மாயில் சப்ரி அரசாங்கத்தை ஒரு பொம்மை போல ஆக்கிவிட்டார், முஹைதீனின் மனதைக் கவர்ந்து அவர் பிரதமராக பதவியேற்றார், அவரது பிரதமர் பதவி பாதுகாக்க இந்தச் செயலைச் செய்துள்ளார்,” என்று அவர் ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறினார்.

டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்தபோது, அவருக்கு ஆலோசகராகவும் இருந்த கதிர், இஸ்மாயில் சப்ரி இனி யாரையும், எந்தப் பதவிக்கு நியமித்தாலும் ஆச்சரியம் அல்ல, பொதுமக்கள் விசித்திரமாக உணர வேண்டாம் என்று நினைவூட்டினார்.

“இதற்குப் பிறகு, நீதிமன்றத் திரளை சார்ந்த உறுப்பினர்களும் முக்கியமான பதவிகளுக்கு நியமிக்கப்படலாம், மக்கள் ஆச்சரியப்பட வேண்டாம். அதில் அவருக்கு அக்கறை இல்லை, காரணம் அது அவருடைய பணம் அல்ல. அது மக்களின் பணம்,” என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 1-ம் தேதி நடந்த கூட்டத்தில், அமைச்சரவை செய்த ஒப்பந்தத்தின் விளைவாக, அமைச்சர் அந்தஸ்துடன் முஹைதீன் எம்பிஎன் தலைவராக நியமிக்கப்பட்டதாக, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமது ஸூகி அலி அறிவிப்பை வெளியிட்டார்.

இளம், புதிய வேட்பாளர்களுக்கு வலியுறுத்துங்கள்

இருப்பினும், இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, பாகோ எம்.பி.யை வெறுமனே மக்களவையின் உறுப்பினராகவும், பெர்சத்துவின் தலைவராகவும், தேசியக் கூட்டணியின் (தே.கூ.) தலைவராகவும் ஆக்கினார்.

அப்படியிருந்தும், இஸ்மாயில் சப்ரி பதவியேற்ற ஒரு நாள் கழித்து, அந்த அம்னோ உதவி தலைவருக்குப் பெர்சத்து அளித்த ஆதரவு நிபந்தனைக்குட்பட்டது என்று கூறியபோது, முஹைதீனின் நிலைப்பாடு இன்னும் செல்வாக்குடன் இருப்பது தெரிய வந்தது.

தற்போதைய அரசாங்கம் தே.கூ. அரசாங்கம் என்று அறியப்படுகிறது என்றும், மாற்றப்பட்டது பிரதமர் பதவி மட்டுமே என்றும் முஹைதின் வலியுறுத்தினார். இது சமீபத்தில் அம்னோவால் மறுக்கப்பட்டது.

ஆனால், மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் குறித்து இஸ்மாயில் சப்ரியிடமிருந்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

முன்னதாக, கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிக்க தவறிய முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுமாறு அம்னோ உச்சமன்றச் செயற்குழு, அம்னோ எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டது.

கதிரின் கூற்றுப்படி, இஸ்மாயில் சப்ரி பிரதமராக பதவியேற்ற 15 நாட்களிலேயே, நம்பகமான நிர்வாகத்தை வளர்ப்பதில் அந்தப் பெரா எம்.பி. தீவிரம் காட்டவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஏனென்றால், இஸ்மாயில் சப்ரி ஒரு ‘மறுசுழற்சி’ அமைச்சரவையை நியமித்துள்ளார்; எம்.பி.என்.-ஐ வழிநடத்த முஹைதீனை நியமித்தது மட்டுமின்றி, அமைச்சர் அந்தஸ்தில் சிறப்பு அரசியல் தூதர்கள் நியமனத்தைப் பராமரித்து, தனது பதவியைத் தற்காத்து கொண்டார் என அவர் கூறினார்.

“தனது சொந்த கூட்டணியின், மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை இழந்ததை ஒப்புக்கொண்டு பதவி விலகிய ஒரு முன்னாள் பிரதமர், நாட்டை மீட்டெடுக்க நியமிக்கப்பட்டார்!

“இது என்ன பைத்தியக்காரத்தனம்? பூசணிக்காயைச் சரிசெய்யும் பணி எலிக்கு வழங்கப்பட்டால் என்ன செய்வது? அந்த எலி வெறும் எலி மட்டுமல்ல, பூசணிக்காயைச் சேதப்படுத்தும் எலி.

“இப்போது, அவரால் சேதமடைந்த பூசணிக்காயைச் சரிசெய்யும் பணி, அவரிடமே வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்மாயில் சப்ரியின் நடவடிக்கைகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தே.கூ. அரசாங்கத்தை உருவாக்கிய ‘தவளை’ அரசியல் கட்சிகளுக்கு, 15-வது பொதுத் தேர்தலில் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற பொதுக் கருத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றார் கதிர்.

எனவே, அடுத்தப் பொதுத் தேர்தலுக்குப் புதிய, இளம், பெண்கள் மற்றும் நம்பகமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு கட்சியும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றார்.