காட்டைப் பாதுகாக்கும் பிகேஆரின் கொள்கைக்கு ஏற்ப சிலங்கூர் எம்பி செயல்படுவார் – அன்வர் நம்பிக்கை

கோல லங்காட் உத்தாரா வனப்பகுதியை (எச்.எஸ்.கே.எல்.யூ.) வனப்பகுதி தகுதியிலிருந்து நீக்குவது குறித்த முடிவில், கட்சியின் கொள்கைக்கு ஏற்ப சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி செயல்படுவார் என்று நம்புவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

இந்த விவகாரத்தில் அமிருடின் ஷாரியின் விளக்கத்தைப் பிகேஆர் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.

“அமிருடின் ஷாரியும், அதே விஷயம் பற்றி மேலும் கலந்துரையாட என்னைச் சந்தித்துள்ளார்

“எனவே, சுற்றுச்சூழல் மற்றும் வன வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பது குறித்த கட்சியின் கொள்கைக்கு ஏற்ப மந்திரி பெசார் மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஆகஸ்ட் 30-ம் தேதி, நடந்த சிலாங்கூர் மாநில சட்டசபை அமர்வின் கேள்வி பதில் நிகழ்ச்சியின் போதுதான், கடந்த மே மாதம் தயாரிக்கப்பட்ட எச்.எஸ்.கே.எல்.யூ. குறித்த அறிவிப்பு வெளியானது.

ஆகஸ்ட் 31-ம் தேதி, கடந்தாண்டு முதல் பிகேஆர் தலைமை அந்த அறிவிப்பை இரத்து செய்ய கேட்டதாக அன்வார் கூறினார்.

17-வது மாநில நிர்வாக மன்றத்தில் (எம்.எம்.கே.என்), கடந்த மே 5-ம் தேதி எட்டபட்ட முடிவுக்குப் பிறகு அந்த அறிவிப்பு செய்யப்பட்டது, இது 18-வது எம்.எம்.கே.என்.-ஆல், மே 19-ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது, பிரிவு 12, மாநில வனவியல் சட்டம் (விண்ணப்பம்) சிலாங்கூர் 1985 சட்டத்தின் கீழ், 536.70 ஹெக்டேர் பரப்பளவை இது உள்ளடக்கியது.

இந்த நடவடிக்கைக்குப் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அத்திட்ட அறிவிப்பை இரத்து செய்வது பற்றிய பொது விசாரணை நடைபெற்றது,.

கோல லங்காட் உத்தாராவில் உள்ள காடு சைபர்ஜயாவுக்கு அருகிலுள்ள ஒரு மதிப்புமிக்க இயற்கை பாரம்பரிய சதுப்பு நிலமாகும், மேலும் இது அழிந்துவரும் பல விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கை வாழ்விடமாகவும் உள்ளது.