இஸ்மாயிலின் பதவி காலம் நீண்டதல்ல – எம்.பி. பாயான் பாரு

சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார் முன்வைத்த சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க, போதிய அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென்பதால், நாடாளுமன்ற அமர்வு ஆண்டுக்கு 180 நாட்கள் இருக்க வேண்டும் என்று பாயான் பாரு எம்.பி. சிம் த்ஸி த்ஸின் கோரினார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், ஆட்சி காலத்தின் முடிவில் அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்றதனால், நாடாளுமன்றச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்த அவருக்கு சிறிது காலம் மட்டுமே உள்ளது.

அடுத்தாண்டு ஜூலை 23-ம் தேதி, நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால், புதிய அரசாங்கத்திற்கு இன்னும் 22 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

“இந்தக் குறுகிய காலத்தில், சட்டம் இயற்றுவது சாத்தியமில்லை,” என்று அவர் கூறினார்.

எனவே, மாநாட்டின் காலத்தை நீட்டிக்குமாறு மக்களவை மற்றும் மேலவை அமைச்சர்களையும் சபாநாயகர்களையும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றச் சேவை சட்டத்தைப் புதுப்பிக்க முன்மொழிந்தவர்களில் வான் ஜுனைடியும் ஒருவர்.