முஹைதீன் தலைமையிலான தேசிய மீட்சி மன்றத்தின் செயல்திறனை டிஏபி சந்தேகிக்கிறது

முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான, தற்போதைய தேசிய மீட்சி மன்றத்தின் (எம்பிஎன்) செயல்திறன் குறித்து டிஏபி சந்தேகம் தெரிவித்துள்ளது.

ஓர் அறிக்கையில், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், முஹைதீனை “அவமானகரமான” முன்னாள் பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளார்.

“RM530 பில்லியனில், எட்டு பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்புகளை அறிமுகப்படுத்திய போதிலும், பிரதமரின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, முன்னாள் பிரதமர் என்ற முறையில், பொருளாதார நிலையை மாற்ற இயலாத முஹைதீனால் இப்போது என்ன செய்ய முடியும்?” என்று லிம் கேள்வி எழுபினார்.

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், எம்பிஎன்-க்குத் தலைமை தாங்காமல், முஹைதீனிடம் ஒப்படைப்பதன் மூலம் எம்பிஎன்-க்கு அவரின் அர்ப்பணிப்பு இல்லாததைக் காட்டியுள்ளார் என்று லிம் கூறினார்.

எம்பிஎன்-க்குப் பிரதமர் தலைமை தாங்காதது, தோட்டா இல்லாத “வெற்று துப்பாக்கி” போல் ஆகும் ஆபத்து கொண்டது என்று லிம் கூறினார்.

“இஸ்மாயில் தனது அதிகாரங்களுக்கு உட்பட்டதை துணை ஒப்பந்தம் செய்வதை நிறுத்த வேண்டும்; மாறாக நிதி வெளியேற்றத்தைத் தடுக்க RM45 பில்லியனை நேரடியாக செலுத்தி பொருளாதாரத்தைப் புதுப்பிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

“உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற கோவிட் -19 தொற்றுடன் போராடுவதில் முதன்மையான கவனம் செலுத்தப்பட வேண்டும். பதவிகளை வழங்கும் அரசியல் விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளித்து, மீண்டும் மீண்டும் தோல்வியடைய இனியும் நேரமில்லை,” என்று லிம் கூறினார்.

ஜூலை மாதம் முஹைதீனால் உருவாக்கப்பட்ட எம்பிஎன், கடந்த மாதம் அவர் தோற்கடிக்கப்படும் வரை அவர் தலைமையில் செயல்பட்டது.

பிரதமராக இருந்த காலத்தில், முஹைதீன் பொருளாதாரத்தை முடக்கிய பல நடமாட்டக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தினார், ஆனால் கோவிட் -19 காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை.

எம்பிஎன்-இல் இணைய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை அழைப்பதாக இஸ்மாயில் உறுதியளித்துள்ளார், ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.