‘ஆபத்து குறைந்த கோவிட் -19 நோயாளிகளை மருத்துவமனைகள் நிராகரிப்பது உயிருக்கு ஆபத்தானது’

ஜொகூர் டிஏபி செயற்குழு உறுப்பினர், கோவிட் -19 நோயாளிகளை ஏற்க மறுக்கும் அரசாங்க மருத்துவமனைகளின் நடவடிக்கை உயிருக்கு ஆபத்தானது என்று எச்சரித்தனர்.

ஒரு மருத்துவரான பூ செங் ஹாவ், சுயப் பரிசோதனை கருவியைப் பயன்படுத்தி ஒரு வாரத்திற்கு இலேசான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் வழக்கைப் பகிர்ந்து கொண்டார்.

நோயாளியின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95 விழுக்காடு என்பது சாதாரணமானதாக இருந்தாலும், அவர் இலேசான உடற்பயிற்சி செய்தபிறகு, 92 விழுக்காடாகக் குறைந்தது என்று அவர் கூறினார்.

“சுகாதார அமைச்சின் (கே.கே.எம்.) வழிகாட்டுதல்களின்படி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்,” என்று பூ தனது முகநூல் பதிவில் கூறினார்.

நிமோனியா அறிகுறிகளைக் காட்டிய நோயாளியின் ஊடுகதிரையும் பூ பகிர்ந்து கொண்டார்.

“அவர் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டார், (ஆனால்) கோவிட் -19 தொற்றின் 3-ஆம் நிலை, நிமோனியா கட்டம் எனக் கண்டறியப்பட்ட போதிலும் மருத்துவமனையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

“அதன் பிறகு, ஊக்க மருந்துகள் மற்றும் எண்டிபயோட்டிக் மருந்துகளுடன், வெளிநோயாளியாக, ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு மருத்து வல்லுநரிடம் அவர் சிகிச்சை பெற வேண்டியிருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

வெளிநோயாளியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நோயாளி இப்போது குணமடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

நோயாளிகளின் நிலை மோசமடைந்து, ஆபத்தான பிரிவுகளான 4 மற்றும் 5-க்குச் செல்வதைத் தடுக்க, ஆரம்ப சிகிச்சையின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஏற்றுக்கொள்ளப்படாமல், வேறு வழியில்லாத துரதிர்ஷ்ட நோயாளிகளும் உள்ளனர் என்று அவர் கூறினார்.

“மருத்துவமனைக்கு வருவதற்கு முன் இறந்து போதல் அல்லது நோயாளிகளின் பிஐடி (இறந்துபோய் கொண்டு வரப்பட்டவர்கள்) அதிகரித்து வருகின்றது. தேசியச் சுகாதார அமைப்பின் தோல்வியினால், கோவிட் -19 நேர்வுகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன.

பி.ஐ.டி. என்பது மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னதாக, மரணமடையும் கோவிட் -19 நோயாளிகளைக் குறிக்கிறது.

நேற்று, 272 கோவிட் -19 இறப்புகளில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு – 81 நேர்வுகள் – அந்தப் பிரிவைச் சார்ந்தவை ஆகும்.