18,547 புதிய நேர்வுகள், 311 மரணங்கள்

இன்று மதியம் வரையில், 18,547 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக, சரவாக் 3,200 நேர்வுகளைப் (63.6 விழுக்காடு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது) பதிவு செய்துள்ளது, இது கிள்ளான் பள்ளத்தாக்கை விட அதிகமான பதிவுகள் ஆகும்.

உள்ளூராட்சி மன்றம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் டாக்டர் சிம் குய் ஹியான் இன்று பகிர்ந்த தரவின் அடிப்படையில், பெரும்பாலான புதிய நேர்வுகள் (99.75 விழுக்காடு வகை 1 அல்லது 2-இல் உள்ளன (அறிகுறிகள் இல்லை அல்லது இலேசான அறிகுறிகள்).

மேலும், இன்று 311 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 18,802 -ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 18,902 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 447 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (3,200), சிலாங்கூர் (2,407), ஜொகூர் (2,174), சபா (2,107), பினாங்கு (1,776), கெடா (1,487), கிளந்தான் (1,458), பேராக் (1,197), பகாங் (742), திரெங்கானு (645), கோலாலம்பூர் (631), மலாக்கா (448), நெகிரி செம்பிலான் (229), புத்ராஜெயா (22), பெர்லிஸ் (20), லாபுவான் (4).

மேலும் இன்று, 39 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 23 பணியிடத் திரளைகள் ஆகும். ஜொகூரில் இன்று ஆக அதிக (9) திரளைகள் பதிவாகியுள்ளன.