முஸ்லீம் அல்லாத மதங்களின் விரிவாக்கக் கட்டுப்பாடு மற்றும் தடைவரம்பு சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம், அண்மையில் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறிய ‘மலேசியக் குடும்பம்’ கருத்தைப் பிரதிபலிக்காது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதிராவ் கடுமையாக சாடினார்.
அவரைப் பொறுத்தவரை, மலேசியாவுக்கு இது போன்ற சட்டங்கள் தேவையில்லை. மறுபுறம், ஒற்றுமையை வலுப்படுத்த இன நல்லிணக்கச் சட்டம் தேவை.
“ஜாகிம் (மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை) முஸ்லிமல்லாதவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்கும் புதியச் சட்டத்தை ஏன் வெளியிட வேண்டும்? ஜாக்கிமுக்கு அதில் என்ன அதிகாரம் உள்ளது?
அரசியலமைப்பின் பிரிவு 11 (4) மற்ற மதங்களை முஸ்லிம்களுக்குப் பரப்ப முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது.
“இது மற்ற மதங்களில் இருக்கும் கட்டுப்பாடுகளைத் தெளிவாக விளக்கவில்லையா?” என்று அவர் ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.
நேற்று, பிரதமர் துறை (இஸ்லாமிய மதம்) துணையமைச்சர் அஹ்மத் மர்சுக் ஷாரி, முஸ்லீம் அல்லாத மத வளர்ச்சி கட்டுப்பாடு மற்றும் தடைவரம்பு சட்டம் உட்பட, தற்போது வரைவு செய்யப்பட்டுள்ள 11 புதிய ஷாரியா மசோதாக்களை அரசு அறிமுகப்படுத்தும் என்றார்.
முஸ்லீம் அல்லாதவர்கள் “அல்லா” என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, முஸ்லீம் அல்லாத மத விரிவாக்கக் கட்டுப்பாடு மற்றும் தடைவரம்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், துணை அமைச்சரின் மதம் பற்றிய அறிவிப்பு, ஜாக்கிம் உருவாக்கிய நான்கு புதியச் சட்டங்கள் உட்பட, முஸ்லீம் அல்லாதவர்களிடையே கவலையைத் தூண்டியுள்ளது என்று கணபதிராவ் கருத்து தெரிவித்தார்.
“நமது அன்புக்குரிய மலேசிய நாடு இஸ்லாமிய நாடா அல்லது மதச்சார்பற்ற நாடா? இன்னும் துல்லியமாக, மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்று அரசியலமைப்பு கூறுகிறதா?
‘இஸ்லாம் அதிகாரப்பூர்வ மதம்’ என்பது ‘மலேசியா இஸ்லாமிய நாடு’ என்ற கருத்திலிருந்து வேறுபட்டது.
“துங்கு அப்துல் இரஹ்மான், மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை ஒருமுறை தெளிவுபடுத்தினார். என்னைப் பொறுத்தவரை, இது அதன் சொந்த அர்த்தத்தை விளக்க போதுமானது,” என்று அவர் கூறினார்.
துணை அமைச்சரின் இந்த அறிவிப்பு, பாஸ் என்பது பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்ட ஒரு நாட்டை ஆள முடியாத கட்சி என்பதைக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.