மலேசிய அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணி, முஸ்லிம் அல்லாத மதங்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சட்டம் இயற்றுவது குறித்து, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தன.
இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மக்களுக்கு இப்போது பொருளாதார மீட்சி மற்றும் பிரகாசமான எதிர்காலம் தேவை, பொது ஒழுங்கை அச்சுறுத்தும் இதுபோன்ற சட்டங்கள் அல்ல என்று அக்கூட்டணி கூறியது.
இதற்கு முன்பு பலமுறை நிராகரிக்கப்பட்ட மசோதா (ஆர்.ஆர்.யு.) 355-ஐ மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கத்தின் முயற்சிக்கு அந்த என்ஜிஓ கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது.
“இதன் நோக்கம் நாட்டில் ஷரியா சட்டத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை, மாறாக, இது மலேசிய அரசியலமைப்புக்கு முரணான, மலேசியர்களின் மனித உரிமைகள், சுதந்திர தந்தையர்களின் ஆசைகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுடன் மலேசியாவின் ஒப்பந்தம் போன்றவை மீதான தாக்குதல்கள் ஆகும்.
“பிரதமர் அவர்களே, உதவி, வேலை வாய்ப்புகள், தடுப்பூசிகள், பொருளாதார மீட்சி மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கை மக்களுக்குத் தேவை.
“நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுபோன்ற சட்டங்களால் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது,” என்று அவர்கள் நேற்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமருக்கு ஒரு கடிதத்தை வழங்கிய பின்னர் ஓர் அறிக்கையில் கூறினார்.
உலகளாவிய மனித உரிமைகள் கூட்டமைப்பின் தலைவர் சசிகுமார், மலாயா, சரவாக் & சபா கூட்டணியின் செயலாளர் அருண் துரைசாமி மற்றும் ‘செகாட் நேஷனல்’ அமைப்பின் தலைவர் குமரன் ஆகியோர் பிரதமர் அலுவலகத்தின் உதவி செயலாளரிடம் கடிதத்தைச் சமர்ப்பித்தனர்.