தடுப்பூசி வகையில் குழப்பம், அரசு ரிம 250,000 செலுத்த வேண்டும் – பத்திரிகையாளர் கோரிக்கை

ஒரு பத்திரிக்கையாளர், அவர் பெற்ற தடுப்பூசி வகை குறித்த குழப்பத்தைத் தொடர்ந்து சுகாதார அமைச்சிடம் RM250,000 கோரினார்.

சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில், தடுப்பூசி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதாக நம்பப்படும் ஒரு சுகாதார அதிகாரிக்கு இந்த வழக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டது.

தமிழ் செய்தித்தாளில் பணிபுரியும் ரவி முனியாண்டி, எம் மனோகரன் & கோ சட்ட நிறுவனத்தின் மூலம், வழக்கு குறித்த அறிவிப்பை நேற்று அனுப்பினார்.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ​​47 வயதுடைய தனது வாடிக்கையாளர், பொது நஷ்டஈடு வழங்க சுகாதார அமைச்சுக்கு (கே.கே.எம்.) 14 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும், இல்லையேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகவும் வழக்கறிஞர் எம் மனோகரன் தெரிவித்தார்.

“கே.கே.எம்.-இன் தவறு என் வாடிக்கையாளருக்கு மன அழுத்தத்தையும் உழைச்சலையும் ஏற்படுத்தியது, அதனால் அவர் கே.கே.எம். பரிந்துரைத்த உளவியலாளரின் ஆலோசனையைப் பெற வேண்டியிருந்தது.

“இப்போது அவர் தயக்கத்துடன் ஃபைசர் தடுப்பூசியை எடுக்க வேண்டும்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு (ஜூன் 16) முதல் ஊசி பெற்ற போதிலும், ரவி இன்றுதான் இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டார் என்று மனோகரன் கூறினார்.

ஃபைஸர் ஊசி போட்ட பிறகு, சினோவாக் நியமன அட்டையைப் பெற்ற பத்திரிகையாளர், கடந்த ஜூலை மாதம், கே.கே.எம்.-க்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

முதலில் பெற்ற தடுப்பூசியின் வகையைத் தீர்மானிக்க இரத்தப் பரிசோதனைகள் செய்ய முடியாததால், தனது வாடிக்கையாளர் அவ்வாறு செய்யத் துணியவில்லை என்று மனோகரன் கூறினார்.

மலேசியாகினி இந்தப் பிரச்சினையில் மருத்துவர் மற்றும் கே.கே.எம்.-இன் பதிலைப் பெற முயற்சிக்கிறது.