மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும்போது, சீருடை அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று கல்வி அமைச்சர் முகமது ராட்ஸி ஜிடின் அறிவித்தார்.
அக்டோபர் 3-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை விவரிக்க, இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராட்ஸி இவ்வாறு கூறினார்.
இருப்பினும், மாணவர்கள் பொருத்தமான, கண்ணியமான மற்றும் நேர்த்தியான ஆடைகளை அணிய வேண்டும் என்றார்.
பள்ளிகளில் முகக்கவரி அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான பள்ளி பேருந்து ஓட்டுநர்களின் தடுப்பூசி நிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய மீட்சி திட்டத்தின் (பிபிஎன்) 3 மற்றும் 4-ஆம் கட்டங்களின் கீழ் உள்ள மாநிலங்களில், பள்ளிகள் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதே நேரத்தில் 1 மற்றும் 2-ஆம் கட்டங்களின் கீழ் உள்ள மாநிலங்களில் முக்கியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் இயங்கலை கற்றலைத் தொடருவர்.
இதுவரை, நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் லாபுவான் மட்டுமே பிபிஎன்-இன் 3 மற்றும் 4 கட்டங்களின் கீழ் உள்ளன.
இருப்பினும், சமீபத்தில் சரவாக்கில் கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்துள்ளன, மாநில அரசு – அடிக்கடி தனது சொந்த கொள்கையை உருவாக்குகிறது – மத்திய அரசின் திட்டத்தைப் பின்பற்றுமா இல்லையா என்பதை இன்னும் குறிப்பிடவில்லை.
கிளந்தான், மலாக்கா, பஹாங், பேராக், பினாங்கு, சபா, சிலாங்கூர், திரெங்கானு, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜயா ஆகியவை 2-ஆம் கட்டத்தின் கீழ் உள்ளன.
கெடா மற்றும் ஜொகூர் இரண்டும் இன்னும் 1-ம் கட்டத்தின் கீழ் உள்ளன.