கோவிட் -19 தொற்றுக்குப் பிந்தைய நாட்டின் கல்வி அமைப்புக்கு உதவுவதற்காக, சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் அரசாங்கக் கொள்கை திட்டங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார்.
இந்தத் திட்டம் “கல்வி கொள்கை அறிக்கை மற்றும் கோவிட் -19 தொற்று : மலேசியாவுக்கு ஒரு தீர்வு” என்று அழைக்கப்படுகிறது.
முன்னாள் கல்வி அமைச்சரின் கூற்றுப்படி, தொற்றுநோய் முடிவடைந்த பிறகு கல்விக்கான ஒரு பெரிய திட்டம் மற்றும் நீண்ட கால திட்டமிடல் செயல்படுத்தப்பட வேண்டும்.
“தேசியக் கூட்டணி (தே.கூ.) அரசை, இதுபோன்ற திட்டத்தைச் சமர்ப்பிக்கும்படி நான் பலமுறை கேட்டேன்.
துரதிர்ஷ்டவசமாக, தே.கூ. அரசாங்கத்தின் 17 மாத ஆட்சியில், அத்தகைய திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.
“கேள்வி கேட்பது மற்றும் வற்புறுத்துவது நம்மை எங்கும் அழைத்துச் செல்லாது என்பதை நான் உணர்கிறேன், அந்த விழிப்புணர்வின் அடிப்படையில் நான் புதிய அரசுக்கு ஒரு கொள்கை அறிக்கை அல்லது முன்மொழிவு திட்டத்தைச் சமர்ப்பிக்க முயற்சித்தேன்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கொள்கை அறிக்கையின் சுருக்கம் இரண்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இது தொற்றின் போது எழுந்த கல்வி சிக்கல்கள் மற்றும் அனைத்து சிக்கல்களிலிருந்தும் வெளியேறுவதற்கான பரிந்துரைகள்.
இரண்டாவது அத்தியாயம் தொழில்துறை புரட்சி (IR4.0) மற்றும் கோவிட் -19 தொற்றுக்குப் பிந்தைய சூழ்நிலையை எதிர்கொள்ள ஒரு முழுமையான தீர்வை முன்வைப்பதன் மூலம் கல்வி சிக்கல்களுக்கான நீண்ட கால மீட்பு திட்டத்தின் விளக்கமாகும்.
அதை அமைச்சரிடம் விட்டு விடுங்கள்
அந்த 65 பக்கக் கொள்கை அறிக்கையின் சுருக்கம், கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் நொரைய்னி அஹமதுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக மஸ்லீ கூறினார்.
இருப்பினும், மஸ்லீயின் கூற்றுப்படி, கொள்கை குறித்து இரு அமைச்சர்களும் கூட்டு விவாதங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்களா என்பது குறித்து அவருக்கு இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
“இதுவரை இல்லை. இன்று காலை நான் நொரைய்னியைச் சந்தித்தேன். அவர் இதுவரை எந்த அழைப்பையும் (விவாதத்திற்கு) கொடுக்கவில்லை.
டாக்டர் ராட்ஸி, நான் இன்று அவரைச் சந்திக்கவில்லை, அவரிடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
கொள்கை அறிக்கையின் சுருக்கத்தைச் சமர்ப்பித்த பிறகு, இரு அமைச்சர்களும் ஏதேனும் கருத்து தெரிவித்திருக்கிறார்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ”இல்லை, ஆனால் நான் அவ்வப்போது அவர்களுக்குக் கூடுதல் தகவல்களை வழங்குவேன்,” என்று அவர் கூறினார்.
“அவர்கள் (அரசு) தங்கள் கடமைகளைச் செய்வதற்கு உதவுவதற்கும் மேம்படுத்துவதற்கும், நம் நாட்டின் கல்வியைக் காப்பாற்றுவதற்காகவும் ஒன்றாக வேலை செய்வதற்கான எனது விருப்பத்தை நான் அவருக்கு (ராட்ஸி) சொல்லிவிட்டேன்,” என்று அவர் கூறினார்.
கொள்கை அறிக்கையின் சுருக்கத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களில், வீட்டிலேயே கற்பித்தல் மற்றும் கற்றலின் போது (பிடிபிஆர்) இணைய அணுகலை பெற இயலாத பிள்ளைகளுக்கு, வீட்டுத் திட்டத்தில் (பிபிஆர்) குழந்தைகளிடையே “கல்வி இழந்த தலைமுறையை” நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரையும் உள்ளது.
மற்றவற்றுடன், கல்வி தொலைக்காட்சி மூலம் கற்றலை மிகவும் சுவாரசியமான முறையுடன் கையாள்வதற்கான திட்டமும் அதில் உள்ளது, கல்வி அமைச்சு மலேசிய டிஜிட்டல் கல்வி கற்றல் முயற்சியைப் (டெலிமா) புதுப்பிக்க, நெட்ஃபிக்ஸ் பாணியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்கேற்ப கல்வி தொலைக்காட்சி தளமாக அது இருக்கும்.
பிடிபிஆர்-இன் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது என்பதற்கான வழிகாட்டுதல் பொருட்களைத் தயாரிக்கவும் கல்வியமைச்சுக்கு முன்மொழியப்பட்டுள்ளது, ஏனெனில் பல பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி உதவ வேண்டும் என்று தெரியவில்லை.