அரசு-பிஎச் புரிந்துணர்வு ஒப்பந்தம் : ஊழல் எதிர்ப்பு அமைப்பு வருத்தம்

அரசாங்கம் – பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டத்தின் (என்ஏசிபி) மூன்று சீர்திருத்தப் பகுதிகள் இல்லாதது கண்டு, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா (திஐ-எம்) அதிருப்தி அடைந்துள்ளது.

“இரு தரப்பு சட்டமியற்றுபவர்களின் நல்ல நோக்கங்களும் நல்லெண்ணமும் அடுத்த சில மாதங்களில் தெளிவான சட்ட அமைப்பு மற்றும் உண்மையான அரசியல் விருப்பத்தின் மூலம் நடைமுறைக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“சமீபத்திய மாதங்களில், என்ஏசிபியில் முன்னிலைப்படுத்தப்பட்ட மூன்று முக்கிய சீர்திருத்தப் பகுதிகளும் எம்.பி.க்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பல்வேறு அறிக்கைகளின் உள்ளடக்கங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைக்கப்படாததில் நாங்கள் ஏமாற்றமடைகிறோம்,” என்று அதன் தலைவர் முஹம்மது மோகன் கூறினார்.

அந்த மூன்று முக்கியப் பகுதிகள், அரசியல் நிதிச் சட்டம், சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு வழக்கறிஞருக்கு இடையேயான அதிகாரங்களைப் பிரித்தல் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) நாடாளுமன்ற அதிகார வரம்பின் கீழ் வைப்பது ஆகியன என்றார் அவர்.

“அரசியல் நிதிச் சட்டம், மசோதா நிறைவடைந்துள்ளது, ஆனால் அதை வெற்றிகரமாக ஆக்குவதற்கு இரு தரப்பினரிடமிருந்தும் முயற்சிகளும் அரசியல் விருப்பமும் இல்லாதது ஏன்?

“சட்டத்துறை தலைவருக்கும் அரசு வழக்கறிஞருக்கும் இடையில், அதிகாரங்களைப் பிரிப்பதற்கும், அதிகார அத்துமீறலைத் தவிர்ப்பதற்கும் ஆகும்,” என்று அந்த ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் கூறினார்.

இருப்பினும், மலேசியாவில் பொருளாதார மீட்பு மற்றும் நாடாளுமன்றச் சீர்திருத்த செயல்முறைக்கு உதவ, செப்டம்பர் 13-ம் தேதி கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முஹம்மது பாராட்டினார்.