நாடாளுமன்றம் | முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, தேசிய மீட்சி மன்றத்தின் (எம்.பி.என்.) தலைவராக டாக்டர் மகாதீர் முகமது நியமிக்கப்படுவார் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் முன்பு உறுதியளித்ததாக முக்ரிஸ் மகாதீர் கூறினார்.
இருப்பினும், அந்தப் பெஜுவாங் தலைவர், எம்பிஎன் நிறுவுதல் ஆரம்பத்தில் மகாதீரின் முன்மொழிவாக இருந்தபோதிலும், அது செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
எம்பிஎன் தலைவராக, மகாதீரைக் கட்சி முன்மொழிந்ததாக முக்ரிஸ் கூறினார், ஏனெனில் அவருக்கு அரசியல் நோக்கம் இல்லை என்று அவர் கூறினார்.
“அவர் (மகாதீர்) எம்பிஎன் தலைவராக நியமிக்கப்பட்டால் பெஜுவாங் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக முன்பு அறிவித்துள்ளார்.
“உண்மையில், சமீபத்தில் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, பெரா (இஸ்மாயில் சப்ரி) லங்காவியைச் (மகாதீர்) சந்தித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பெரா (இஸ்மாயில் சப்ரி) பிரதமரானால், எம்பிஎன் நிறுவப்படும் என்றும் அதன் தலைவராக (மகாதீர்) லங்காவி நியமிக்கப்படுவார் என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
“துரதிருஷ்டவசமாக, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, ஆனால் இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீவிரமாக தீர்வு காண விரும்பினால், இது மிக முக்கியமான விஷயமாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி, பெஜுவாங் துணைத் தலைவர் மர்சுகி யஹ்யா, அப்போது துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி, டாக்டர் மகாதீரைச் சந்தித்து புதிய பிரதமராக வர ஆதரவு கோரியதை உறுதி செய்தார்.
அந்த 30 நிமிடச் சந்திப்பில், எம்பிஎன் அமைக்க மகாதீரின் அழைப்பும் இருந்தது.
முன்னாள் பிரதமர், எம்பிஎன் உறுப்பினர்களாக இருப்பதற்கு ஏற்றவர்கள் என்று நினைத்த பெயர்களையும் பட்டியலிட்டார், இது மருத்துவம், பொருளாதாரம், சட்டம், கல்வி மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரமுகர்களை உள்ளடக்கியது.
எனினும், இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த முக்ரிஸ், எம்பிஎன் தலைவராக இஸ்மாயில் சப்ரி முஹைதீனை நியமித்தது ஆச்சரியப்படுத்தியது என்றார்.
நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தபோது, கோவிட் -19 தொற்றுநோயை சமாளிப்பதில் முஹைதீன் தோல்வியடைந்தார் என்பது முக்ரிஸின் கூற்று.
“மறுபுறம், அரசாங்கத்தின் எம்பிஎன் உறுப்பினர்களில் 50 விழுக்காடு மட்டுமே நிபுணர்கள், 25 விழுக்காடு அரசியல்வாதிகள் அரசாங்கத்திலிருந்து இருக்கலாம், மேலும் 25 விழுக்காடு எதிர்க்கட்சியின் எம்பிக்கள் என்று முன்மொழியப்பட்டதை நாங்கள் அறிகிறோம்.
“இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகளின் பங்களிக்கும் திறனை நான் கேள்வி கேட்க விரும்பவில்லை, ஆனால் இது முன்னர் செய்யப்பட்டு, தோல்வியடைந்த ஒன்று.
“எனவே இப்போது மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நேரத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைக் கையாள சிறந்த நடவடிக்கைகள் என்ன என்பதை அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்க இந்தத் துறையில் நிபுணர்களாக உள்ளவர்களிடம் நாங்கள் விட்டுவிடுகிறோம்,” என்று அவர் கூறினார்.