ஆடாம் அட்லி, இளம் ஆர்வலர்கள் குழு பிகேஆரில் இணைந்தனர்

முன்னாள் மாணவர் தலைவர்கள் ஆடாம் அட்லி மற்றும் அஷீக் அலி சேதி அலிவி உட்பட, 20 இளம் ஆர்வலர்கள் இன்று பிகேஆர்-இல் இணைந்தனர்.

குழுவின் பிரதிநிதிகள், உறுப்பினர் படிவங்களைக் கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமிடம் இன்று காலை, சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வழங்கினர்.

அன்வர் தனது வரவேற்பு உரையில், இலட்சியவாதம் கொண்டவர்கள் மற்றும் போராட்டத்தில் உறுதியாக இருப்பவர்கள் கட்சியில் இணைவது பெருமையளிக்கிறது என்றார்.

“ஆடாம், அஷீக் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் என்னைச் சந்தித்தபோது, ​​நான் பெருமைப்பட்டேன். அவர்கள் இளம் ஆர்வலர்கள் மத்தியில் இலட்சியவாதம், அர்ப்பணிப்பு மற்றும் போராட்டத்திற்குப் பெயர் பெற்றவர்கள்.

சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில் (யுபிஎஸ்ஐ) படிக்கும் போது ஆடாம் மாணவர் ஆர்வலராகத் தொடங்கினார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, பல மாணவர் ஆர்வலர்களுடன் சேர்ந்து வருங்கால ஆசிரியர்களை நியமிப்பது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கினார்,

2011 டிசம்பரில் நடந்த ஒரு போராட்டத்தின் போது, அம்னோ தலைமையகத்தில் அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக்கின் படத்தைக் காட்டும் கொடியை இறக்கியது உட்பட பல சர்ச்சைகளில் ஆடாம் சிக்கினார்.

தற்போது வழக்கறிஞராக இருக்கும் அஷீக், மலேசியத் தேசியப் பல்கலைகழகத்தில் இருந்தபோது மாணவர் ஆர்வலராகத் தொடங்கினார்.

2016-ஆம் ஆண்டில் தங்காப்எம்ஓ1 (TangkapMO1) என்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்களில் அவரும் ஒருவர், “மலேசிய நம்பர் 1 தலைவர்” 1எம்டிபி-இலிருந்து US$ 731 மில்லியன் பெற்றார் என்பது தொடர்பில், அமெரிக்க நீதித்துறை (DoJ) தாக்கல் செய்த வழக்கு தொடர்பான போராட்டம்.

ஆர்ப்பாட்டத்தில் ஆஷீக் பங்கேற்றதன் விளைவாக அவர் ஒரு தவணை பல்கலைக்கழகப் படிப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஊடகங்களிடம் பேசிய ஆடாம், தனது அரசியல் கருத்துக்களுக்கு ஏற்ப கட்சி இருப்பதை உணர்ந்ததால், பிகேஆரில் சேர முடிவு செய்ததாகச் சொன்னார்.

“பிகேஆர் என்பது ஒரு பல இன அரசியல் தளமாகும், இது முற்றிலும் சரியானதாக இல்லாவிட்டாலும், இன்று நான் நம்பும் அரசியல் உறுதியுடன் ஒத்துப்போகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நாட்டிற்கு அதிக இளைஞர் பிரதிநிதிகள் தேவை என்று ஆஷீக் தெரிவித்தார்.

“இளைஞர்கள் நாட்டின் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் தனிமைப்படுத்தப்படக் கூடாது … எங்கள் குரலையும் கேட்க வேண்டும்.

“அதற்காக, நாங்கள் இன்று பிகேஆரில் சேர முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.