ஜிஇ15-க்கான சின்னம் : சரியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் – அன்வர்

அடுத்த பொதுத் தேர்தலில் (ஜிஇ) பி.எச். பயன்படுத்தும் சின்னம் மீதான சர்ச்சைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறினார்.

பி.கே.ஆர். சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் சிலர் பரிந்துரைத்ததாகவும், அதே நேரத்தில் உறுப்பு கட்சிகள் பி.எச். சின்னத்தைப் பயன்படுத்த விரும்புவதாகவும் பிகேஆர் தலைவரான அன்வர் கூறினார்.

“பி.கே.ஆர். சின்னத்தைப் (ஜிஇ15-இல்) பயன்படுத்த தலைமைக்கு வலியுறுத்திய அடிமட்ட மக்களின் கருத்துக்களையும் நான் மதிக்கிறேன்.

“பிஎச் சூழலையும் நான் புரிந்துகொண்டேன், பிஎச் சின்னத்தைப் பயன்படுத்த நண்பர்களிடமிருந்து அழைப்புகள் உள்ளன.

“எனவே, இணக்கமான தீர்வைப் பெறுவதற்கு இணக்கமாகப் பேச்சுவார்த்தை நடத்தலாம்,” என்று அவர் இன்று ஒரு இயங்கலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அன்வர் இரு தரப்புக்கும் “வலுவான வாதங்கள்” இருப்பதாகக் கூறினார், ஆனால் மேலும் கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த வாரம், கூட்டரசுப் பிரதேச பிகேஆர் மாநில தலைமை மன்றம் (எம்பிஎன்), பிகேஆர் கட்சி சின்னத்தை அடுத்த ஜிஇ -யில் பயன்படுத்துமாறு பி.எச்.-ஐ வலியுறுத்தியது, இது “வெற்றியைத் தரும் சூத்திரம்” என்று அது விவரித்தது.

இருப்பினும், பிஎச் சின்னம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பும் கூட்டரசுப் பிரதேச டிஏபி இளைஞர்கள் அதை எதிர்த்தனர்.

“ஓர் அரசியல் கூட்டணியில், மற்ற கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவது ஒரு சுயநல செயலாகவும் மற்ற கட்சிகளின் சக்தியையும் திறமையையும் மதிக்கவில்லை என்றும் பார்க்கப்படுகிறது,” என்று கூட்டரசுப் பிரதேச டிஏபி இளைஞர் தலைவர் லீ பிங் ஹாங் கூறினார்.