தேவைப்படும் நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கவும் – அதிகத் தடுப்பூசி பெற்ற நாடுகளுக்கு வலியுறுத்து

அதிகக் கோவிட் -19 தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குத் தங்கள் மருந்தளவுகளை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள், நேற்று ஒரு கூட்டறிக்கையில் இந்த அழைப்பை விடுத்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

உடனடி நடவடிக்கை இல்லாமல், இந்த ஆண்டு அனைத்து நாடுகளிலும் 40 விழுக்காடு தடுப்பூசி வீதத்தை எட்டுவது சாத்தியமில்லை என்று அவர்கள் கூறினர்.

ஒட்டுமொத்தமாக அதிகத் தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகள், தங்களுக்குத் தேவையானதை விட இரண்டு பில்லியன் மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசியை அதிகமாக வாங்கியுள்ளன என்று அவர்கள் கூறினர்.

எனவே, இந்த நாடுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் தடுப்பூசி இடைவெளியைக் குறைக்க, உலகளாவிய விநியோகத் திட்டங்களுடன் தங்கள் குறுகிய கால விநியோக அட்டவணையை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

வழங்கப்பட்ட பங்களிப்புகளின் உறுதிமொழிகளை நிறைவேற்றவும், தடுப்பூசி நிறுவனங்களை ஒப்பந்தங்களிலிருந்து விடுவிக்கவும் இந்த நாடுகளை அவர்கள் வலியுறுத்தினர், இதனால் மருந்தளவுகள் தேவைப்படும் நாடுகளுக்கு வழங்கப்படலாம்.

தடுப்பூசி நிறுவனங்களான கோவாஸ் மற்றும் அவத் – ஆப்பிரிக்காவின் விநியோகத் திட்டங்கள் – மற்றும் அவர்களின் விநியோக அட்டவணைகள் தொடர்பான மாநிலக் கொள்கைகளுடனான ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான தடுப்பூசி விகிதங்களில் உள்ள இடைவெளி, அடுத்த வாரம் அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள ஐ.நா. உச்ச மாநாட்டில் பேசப்படும்.