தாயிப்பையும் குடும்பத்தினரையும் கைது செய்க, மலேசியாவுக்கு வலியுறுத்தல்

சரவாக் முதல் அமைச்சரையும் அவரின் குடும்பத்தார் 13 பேரையும் “அதிகார அத்துமீறல்”களுக்காகவும் ஊழல்களுக்காகவும் சட்ட விரோத அமைப்பு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டதற்காகவும் வேறு பல குற்றங்களுக்காகவும் கைது  செய்ய வேண்டும் என்று ஆறு நாடுகளின் என்ஜிஓ-கள் (அரசு சாரா அமைப்புகள்) மலேசியாவைக் கேட்டுக்கொண்டுள்ளன.

அந்த என்ஜிஓ-களில்  புருனோ மன்செர் நிதியம்(பிஎம்எப்), கிரீன்பிஸ், காட்டுவளக் கண்காணிப்பு அமைப்பான ஃபெர்ன் ஆகியவையும் அடங்கும்.

பத்து-பக்கக் கடிதமொன்றில் அவை அவர்களின் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளன. அவையாவன:

-அரசுப் பணத்தைச் சட்டவிரோதமாகக் கையாடல் செய்தது;
-அதிகார அத்துமீறல்;
-அரசு நிலங்களை அபகரித்தது;
-மோசடி, ஊழல்;
-பதவியைத் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது;
-கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முனந்தது; -சட்ட விரோத நோக்கம் கொண்ட அமைப்பை உருவாக்க சதி செய்தது.

இன்றைய தேதியிடப்பட்ட அக்கடிதம் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்கும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அஃப் போலீசுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

“மலேசிய சட்டத்துறை, தாயிப்பையும் அவரின் நான்கு பிள்ளைகளையும் எட்டு சகோதர சகோதரிகளையும் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்”, என மலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அந்த என்ஜிஓகள் கேட்டுக்கொண்டுள்ளன.

சரவாக்கைச் சேர்ந்த மூன்று என்ஜிஓகள்-போர்னியோ ரிசோசர்ஸ் இன்ஸ்டிடியுட் சரவாக், சுதேசி நில உரிமைக்காப்பு கட்டமைப்பு, சிபுவில் உள்ள மாற்று வாழ்க்கைமுறை மேம்பாட்டுக் கழகம்- கடிதத்தில் காணப்படும் விவரங்கள் சரியே என்று ஏற்புக் கையொப்பமிட்டுள்ளன.

தாயிப்பின் பிள்ளைகளின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள், ஜமிலா ஹமிடா (இடம்), மஹ்மூட் அபு பெக்கி, சுலைமான் அப்துல் ரஹ்மான், ஹனிபா ஹஜார் ஆகியோராவர்.

அவரின் சகோதர-சகோதரிகள் என இப்ராகிம், அயிஷா, சலேஹா, ஒன் முகம்மட் அலி, முகம்மட் டுஃபாயில், அமர் ஹஜார் பிரெடாஹனும்,ரஸியா என அடையாளம் கூறப்பட்டுள்ளனர்.

தாயிப்  சம்பந்தப்பட்ட ஊழல்களை மலேசியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்குத் தெரியப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது

கடிதத்தின் படிகள் மலேசியாவில் உள்ள முக்கிய தூதரகங்கள், ஏழு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் முதலியோருக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

பிஎம்எப் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தாயிப்புக்கும் அவரின் குடும்பதாருக்கும் 332 மலேசிய நிறுவனங்களிலும் 85 வெளிநாட்டு நிறுவனங்களில் பல பில்லியன் டாலர் பெறுமதியுள்ள பங்குரிமை இருப்பது தெரிய வந்துள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில்தான் தாயிப்பும் அவரின் குடும்பத்தாரும் இவ்வளவு சொத்துக்களையும் சேர்த்திருக்க வேண்டும் என்று அவை குற்றம் சாட்டியுள்ளன.

“தாயிப் அரசு ஊழியராக இருந்து பின் அமைச்சரானவர். பதவிக்கு வருமுன் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அவரிடம் சொந்தத்தில் சொத்துடைமை இருந்ததில்லை.”

தாயிப் முதலமைச்சராக இருப்பதால் அவரின் குடும்பதார் சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு-சஹ்யா மாத்தா சரவாக், ஆச்சி ஜெயா ஹோல்டிங்ஸ், தா அன் ஹொடிங்ஸ்- கிடைத்துள்ள சலுகைகளை அக்கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது.

சஹ்யா மாத்தா சரவாக் நிறுவனம் சரவாக்கில் சிமெண்ட் உற்பத்தியில் ஏகபோக உரிமையை அனுபவித்து வருகிறது; வெட்டுமர ஏற்றுமதிக்கான உரிமங்கள் மொத்தமாக ஆச்சி ஜெயா ஹோல்டிங்ஸ் கைகளில் உள்ளன; தா அன் ஹோடிங்ஸுக்கு பொது டெண்டருக்கு அழைக்கப்படாமலேயே 675,000 ஹெக்டார் நிலம் வழங்கப்பட்டு வெட்டுமர, தோட்டத்தொழில்களில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அக்குடும்பத்தாருக்கு கெனடாவில் (Sakto Corporation, City Gate International Corporation போன்ற நிறுவனங்களில்) பிரிட்டனில்  (Ridgeford Properties Ltd.), அமெரிக்காவில் (Wallysons Inc, Sakti International Corporation இன்னும் சிலவற்றிலும்) சொத்துக்கள்  இருப்பதுடன் ஆஸ்திரேலியாவில் 22 நிறுவனங்களில் நெருக்கமான தொடர்பு உண்டு என்றும் கூறப்படுகிறது.

தாயிப்பும் அவரின் குடும்பத்தாரின் தனிப்பட்ட நிறுவனங்களும் “சட்ட விரோத போக்குக்கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை” யாரும் மறுக்கவியலாது என்று அந்த என்ஜிஓ-கள் கூறியுள்ளன.

“மலேசியா, ஐநா ஊழல் எதிர்ப்புச் சாசனத்திலும் நாடுகடந்து புரியப்படும் குற்றங்களுக்கு எதிரான ஐநா சாசனத்திலும் கையொப்பமிட்டுள்ள நாடு என்ற முறையில் இந்த ஊழலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம்”, என்று அவை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.

தாயிப்மீது ஏற்கனவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சரவாக்கின் வெட்டுமரத் தொழில் ஆதாயங்களை அவரின் குடும்பத்தாருக்குச் சொந்தமான நிறுவனங்களே விழுங்கி ஏப்பமிடுவதாக குறைகூறப்பட்டிருப்பதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

ஆனால், தாயிப்பும் அவரின் குடும்பத்தாரும் தங்களைப் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.