மனித வள அமைச்சு, சமூகப் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) மற்றும் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு மூலம், பி40 இல்லத்தரசிகளுக்கு சொக்சோ பாதுகாப்பை வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவைக்குக் கொண்டுவரும்.
மனிதவள அமைச்சர் எம் சரவணன், நாடு முழுவதும் சுமார் 2 மில்லியன் இல்லத்தரசிகளை உள்ளடக்கிய இந்த முன்மொழிவு, கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழுவைப் பாதுகாக்க அவசியமானதாகக் கருதப்படுகிறது, குறிப்பாக குடும்ப வருமானத்திற்காக கணவர் வேலைக்குச் செல்ல முடியாவிட்டால்.
“எனினும், இது அரசாங்கத்தின் நிதி நிலையைப் பொறுத்தது, இந்தக் கோவிட் -19 சூழ்நிலையில், கணவரால் வேலை செய்ய இயலாமல், மனைவி நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களைப் பாதுகாக்க எந்தவொரு திட்டமும் இல்லை.
“அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு முன்னுரிமை அளிப்பதால், இந்த 2 மில்லியன் பி40 இல்லத்தரசிகளுக்கும் இலவசப் பாதுகாப்பு நிகர பாதுகாப்பை வழங்குவதற்கான எங்கள் விண்ணப்பத்தை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, ஈ-காசே (eKasih) திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 150,000 பி40 பெண்களுக்குப் பங்களிப்புகளை வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
முன்னதாக, ஏப்ரல் 12, 2020 அன்று ஏற்பட்ட சாலை விபத்து காரணமாக, கடந்த மே 12-ம் தேதி, காலமான விஜய குமரனின் வாரிசு டி.வீரசாமிக்கு சொக்சோ சலுகைகளை சரவணன் வழங்கினார்.
அது தவிர, மறைந்தவரின் மனைவி, T. பூங்கோதை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, இறுதி சடங்கு மேலாண்மை திகையாக RM2,000 வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, படித்து கொண்டிருக்கும் 19 மற்றும் 21 வயதுடைய அவரது இரு மகள்களுக்காக மாதம் RM2,232 வழங்கப்படும்.
கோலாலம்பூர் மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்கான தொகை RM23,000 உட்பட இறந்தவரின் அனைத்து மருத்துவச் செலவுகளையும் சொக்கோ முழுமையாக ஏற்றது.
பெருந்தோட்டத் துறையில், மனிதவளத்தின் தேவை குறித்து கேட்டபோது, நாட்டில் தற்போது இந்தத் துறைக்கு 100,000 தொழிலாளர்கள் தேவைப்படுவதாக சரவணன் கூறினார். ஆனால், அவரது தரப்பு தொடர்ந்து உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றார் அவர்.
- பெர்னாமா