துவாங்கு அப்துல் ஹாலிம் 14வது ஆகோங் ஆனார்

கெடா சுல்தான், துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா, நாட்டின் 14வது யாங் டி-பெர்துவான் ஆகோங்காக இன்று பதவியேற்றார்.கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் சடங்குபூர்வமாக அவர்  பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

துவாங்கு அப்துல் ஹாலிம் இரண்டாவது தடவையாக பேரரசர் பதவியை அலங்கரிக்கிறார். முதல் தடவை அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோது அவருக்கு வயது 43. 1970, ஜனவரி 21-இலிருந்து 1975,செப்டம்பர் 20 வரை அவர் அப்பதவியில் இருந்தார்.

மலேசியாவில் சுழல்முறையில் பேரரசர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒன்பது மலாய் ஆட்சியாளர்கள் இடம்பெற்றுள்ள மன்றம் தங்களில் ஒருவரை பேரரசராக தேர்ந்தெடுக்கிறது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு மாமன்னராக பதவி வகிப்பார்.

2011, அக்டோபர் 14-இல் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற ஆட்சியாளர் கூட்டம் துவாங்கு ஹாலிமை இரண்டாவது தடவையாக பேரரசராக தேர்ந்தெடுத்தது.

அதே கூட்டம், கிளந்தான் சுல்தானான ஐந்தாம் சுல்தான் முகமட்டை துணைப் பேரரசராக நியமனம் செய்தது.

பேரரசரின் பதவியேற்புச் சடங்கு கோலாலம்பூர், ஜாலான் டூட்டாவில் 96.52 ஹெக்டாரில் கட்டப்பட்டுள்ள புத்தம் புதிய இஸ்தானா நெகாராவில்  நடைபெற்றது.

பேரரசர் ஒருவரின் பதவியேற்பு நிகழ்வு அங்கு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.