‘சூராவ்வுடன் சுமூகமான முறையில் நாங்கள் தீர்வு காண்போம்’ – கோவில் தலைவர்

சூராவ் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும், நெகிரி செம்பிலான், தம்பினில் உள்ள ஒரு கோயிலின் நிர்வாகம், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சுமுகமாகப் பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.

“தாமான் இண்டா குடியிருப்பாளர்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்.

“சுராவ் நிர்வாகம் மற்றும் மாநில அரசாங்கத்துடன் இணைந்து ஆலயப் பிரச்சனையைத் தீர்ப்போம்,” என்று தாமான் இண்டா, ஸ்ரீ முருகன் ஆலயத் தலைவர் எம்.பார்த்திபன் மலேசியாகினியிடம் கூறினார்.

மசூதிக்கு முன்மொழியப்பட்ட இடத்தில், கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் சூராவ் செயலவை உறுப்பினர்கள் முன்பு ரெப்பா சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு மனுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியத் தரப்புகளில் ஒன்றான இஸ்லாமியப் பாதுகாவலர் அமைப்புகளின் குழு (பெம்பேலா), நெகிரி செம்பிலான் இஸ்லாமிய மத விவகாரத் துறை (JHEAINS) இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது.

அந்நிலத்தில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களைக் கட்ட, மாநில அரசு ஒருபோதும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மந்திரி பெசார் அமினுதீன் ஹருன் கூறினார்.

JHEAINS இயக்குநர் ஜைதி ரம்லி, அந்த இடத்திற்கு அருகில் ஒரு கோயில் இருப்பதாக கூறினார், ஆனால் அது முழு மசூதி தளத்திலும் இல்லை.

இதற்கிடையில், மேலும் இது குறித்து விவாதிக்க கோயில் நிர்வாகம் இந்த வெள்ளிக்கிழமை கூடும் என்று பார்த்திபன் கூறினார்.

‘வெளியாட்களால்’ ஏமாற்றம்

எவ்வாறாயினும், “வெளியாட்களின்” செயல்களால் அவர்கள் ஏமாற்றமடைந்ததாகவும், அரசியல்வாதிகள் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

கோவிலின் வரலாற்றைச் சொன்ன அவர், இது 70-களில் சுற்றியுள்ள பகுதி இந்துக்களால் அந்நிலத்தில் கட்டப்பட்டது.

“நான் தலைவரான பிறகு, கோயிலில் சில மேம்பாடுகளைச் செய்தேன்.

“ஆனால், சமீபத்தில் மசூதிக்கான இடத்தில் எங்கள் கட்டுமானம் நுழைந்துவிட்டது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது.

“எங்களுக்கு உண்மையில் அது தெரியாது. நாங்கள் மசூதி தளத்தில் அத்துமீறி நுழைந்தது உண்மை என்றால், அது தற்செயலானது.

“இந்த விவகாரத்தைத் தீர்க்க அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று 2018 முதல் கோவில் தலைவராக இருக்கும் அவர் கூறினார்.