தடுப்பூசி போடப்படாத மாணவர்கள் பள்ளி செல்ல தடை இல்லை

கோவிட் -19 தடுப்பூசி பெறாத அல்லது தடுப்பூசி போட மறுத்த பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படாது என்று துணைக் கல்வி அமைச்சர் மா ஹாங் சூன் கூறினார்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மா, ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி பெறும் உரிமை இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

“நாங்கள் மறுக்கவோ அல்லது அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கவோ எந்தக் காரணமும் இல்லை.

“அவர்களின் பெற்றோருக்கு நாங்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்குவோம்.

“ஏனெனில் ஒரு மாணவர் தடுப்பூசி போட மறுத்தால், அது பொதுவாக மாணவரின் முடிவு அல்ல, பெற்றோரின் முடிவு,” என்று அவர் கூறினார்.

கல்வி அமைச்சு இந்த விஷயத்தில் முடிவு செய்திருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த போது மா இவ்வாறு கூறினார்.

மாவின் கூற்றுப்படி, தடுப்பூசியை ஏற்க குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தயாராக இல்லை என்று அவரது தரப்பு நம்புகிறது.

“நாங்கள் இன்னும் பள்ளி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறோம். எனவே இந்த நேரத்தில், எத்தனை பேர் தடுப்பூசி போட மறுக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

“ஒட்டுமொத்தமாக, எண்ணிக்கை அதிகமாக இல்லை என்று நான் நினைக்கிறேன். எனவே இப்போதைக்கு நாங்கள் அதை உன்னிப்பாகக் கண்காணிப்போம்,” என்று அவர் சொன்னார்.

அரசாங்கம் இந்த வாரம் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தை (பிக்) 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 3.2 மில்லியன் இளையர்களுக்குத் தொடங்கியது.

ஜனவரி 20, 2022-க்குள் அல்லது அடுத்த புதிய தவணை திறப்பதற்கு முன்பு, அந்த எண்ணிக்கையில் குறைந்தது 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

எந்தப் பள்ளியும் ஒதுக்கி வைக்கப்படவில்லை

தனியார் நிறுவனங்கள் உட்பட எந்தப் பள்ளிகளும் அல்லது மாணவர்களும் தடுப்பூசி திட்டத்திலிருந்து விலக்கப்பட மாட்டார்கள் என்று மா செய்தியாளர்களிடம் கூறினார்.

“எங்களின் கொள்கை என்னவென்றால், எதிர்காலத்தில் முடிந்தவரை அதிகமான மாணவர்கள் தடுப்பூசி போட வேண்டும்.

“நாங்கள் எந்தப் பள்ளியையும் தேர்வு செய்யவில்லை, பள்ளிகளை மீண்டும் திறப்பதில் கவனம் செலுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஜாலியின் கூற்றுப்படி, தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளைத் தடுப்பூசி திட்டத்திற்கு ‘வக்ஸின் அனாக்கு’ (Vaksin Anakku) தளத்தின் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அந்தந்தப் பள்ளிகள் மூலம் வழங்கப்படும் அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்றும், அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு விரைந்து செல்ல வேண்டாம் என்றும் அஸ்மி பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.

“கவலைப்படாதீர்கள், பீதியடையாதீர்கள், அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகள் எங்களிடம் உள்ளன,” என்று அவர் கூறினார்.