தொற்றுநோயின் போது 155,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் – சரவணன்

நாடாளுமன்றம் | கோவிட் -19 வெடித்ததில் 155,893 பேர் வேலை இழந்தனர் என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் கூறினார்.

எவ்வாறாயினும், பணிநீக்கங்கள் அனைத்தும் 1955 வேலை சட்டத்தின்படி செய்யப்பட்டதால், 5,959 முதலாளிகளில் யாரும் வேலைவாய்ப்பு சட்டத்தை மீறியதற்காக நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படவில்லை.

“மனிதவளத் துறை மூலம் மனிதவள அமைச்சு எப்போதும் கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் பணிநீக்கங்களுடன் தொடர்புடைய உள்ளூர் தொழிலாளர்களுக்கு உதவவும் கண்காணிக்கவும் முனைப்புடன் செயல்படுகிறது.

“2020 முதல் ஜூலை 2021 வரை, தீபகற்ப மலேசியாவில் 5,095 முதலாளிகள் 141,191 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர்.

“இதற்கிடையில், சரவாக் மாநிலத்தைப் பொறுத்தவரை, 509 முதலாளிகள் ஒரே நேரத்தில் 8,996 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தனர்,” என்று அவர் நேற்று நாடாளுமன்றப் பதிலில் கூறினார்.

“சபாவில், 355 முதலாளிகள் 5,706 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தனர், 2020 முதல் செப்டம்பர் 2021 வரை விடுதித் துறை மற்றும் அதன் தொடர்பு கொண்ட உணவு மற்றும் பானம் சேவை, உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை மற்றும் நிர்வாகம் மற்றும் ஆதரவு சேவைத் துறை ஆகியவை இதில் அடங்கும்,” என்று அவர் விளக்கினார்.

ஊழியர்களின் உரிமைகள் மற்றும் நலன் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அமைச்சு நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“அந்த நோக்கத்திற்காக, முதலாளிகள் பிரிவு 63, வேலைவாய்ப்பு சட்டம் 1955-இன் படி பணி நீக்கத்திற்கு முன்னதாக, முப்பது (30) நாட்களுக்குள் பணிநீக்கம் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“இது பணிநீக்கச் சலுகைகள், பணிநீக்க அறிவிப்புகள் மற்றும் பிற நிதி நன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டப்படி ஊழியர்களின் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக” என்று சரவணன் கூறினார்.

“தற்போதுள்ள சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறும் அல்லது சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு, ஒவ்வொரு குற்றத்திற்கும் RM10,000-க்கு மிகாமல் தண்டம் விதிக்கப்படலாம்.

2020 ல் இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறைக்கு வந்ததிலிருந்து தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்த முதலாளிகளின் எண்ணிக்கையை வழங்குமாறு எதிர்க்கட்சி எம்பி ஆர்.எஸ்.என். ராயர் கேட்டிருந்தார்.

உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி, 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரையில் 15,537 வணிகங்கள் மூடப்பட்டன என்று கூறினார்.

2019-இல், கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்பு, 13,527 வணிகங்கள் திவாலாகிவிட்டதாக அலெக்சாண்டர் கூறினார்.