தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கோவிட் -19 தடுப்பூசிகளும், தொற்றுநோயால் ஏற்படும் இறப்பு மற்றும் கடுமையான நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் உறுதியளித்தார்.
எனினும், சுகாதார அமைச்சு சினோவாக் தடுப்பூசி பற்றிய மேலதிக ஆய்வுகளை நடத்துகிறது, இதில் பெறுநர்களுக்குப் பூஸ்டர் ஊசி போடும் சாத்தியமும் அடங்கும் என்று அவர் கூறினார்.
அமைச்சு தனது ஆய்வின் முடிவுகளை நேற்று அறிவித்தது. முழு மருந்தளவு தடுப்பூசி, தொற்றுநோய்க்கான ஆபத்தை 88 விழுக்காடு குறைத்தது.
பாதிக்கப்பட்டவர்களிடையே, தடுப்பூசி போடப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசி பெற்றவர்களுக்குத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சேர்க்கும் ஆபத்து 83 விழுக்காடும் இறப்பு 88 விழுக்காடும் குறைத்துள்ளது.
இருப்பினும், சினோவாக் தடுப்பூசியின் செயல்திறன் – உயர்வாக இருந்தாலும் – ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளை விட பின்தங்கியுள்ளது.
இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தடுப்பூசி அல்லது வேறு காரணிகளால் வித்தியாசம் உள்ளதா என்பதை அறிய, இந்த விஷயத்தை இன்னும் நெருக்கமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கைரி கூறினார்.
“இது தடுப்பூசி வகையினாலா அல்லது நோயாளிகளால் ஏற்படும் வேறு சில காரணங்களாலா என்பதைத் தீர்மானிக்க ஆழமான ஆய்வு செய்ய வேண்டும்.
“எனவே, இந்தப் பரந்த பகுப்பாய்வு செய்யப்படுகிறது, மேலும் தடுப்பூசி வகை ஒரு காரணியாக இருப்பது கண்டறியப்பட்டால், பூஸ்டர் ஊசி மருந்துகளின் நிர்வாகத்தில் நாங்கள் கருத்தில் கொள்வோம்.
“ஆனால் இப்போதைக்கு, முக்கியமான விஷயம் என்னவென்றால், மலேசியாவில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் பயனுள்ளவை, இறப்புகள் மற்றும் ஐசியு சேர்க்கைகளை அவை குறைத்துள்ளன. அதுதான் மிக முக்கியமான விஷயம்,” என்று அவர் கூறினார்.