எம்.ஏ.63 இறுதி அறிக்கை : புத்ராஜெயா எதை மறைக்க விரும்புகிறது?  

ஒரு ஆய்வு முடிந்த பிறகும், 1963 மலேசியா ஒப்பந்தம் (எம்ஏ63) குறித்த இறுதி அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய அரசின் நோக்கத்தைப் பக்கத்தான் ஹராப்பான் (பிஎச்) சபா இன்று கேள்வி எழுப்பினார்.

இன்று ஒரு கூட்டு அறிக்கையில், இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தைப் (ஓ.எஸ்.ஏ.) பயன்படுத்தி, இறுதி அறிக்கையைப் புத்ராஜெயா ‘புதைக்க’ விரும்புவதாகத் தெரிகிறது என்று சபா பிஎச் கூறியது.

“மறைக்க என்ன இருக்கிறது? எம்ஏ63 நாட்டில் மிகவும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம்,” என்று அவர்கள் கூறினர்.

இந்த அறிக்கையில், சபா பிகேஆர் தலைவர் கிறிஸ்டினா லீயு, வில்ஃபெரட் மேடியுஸ் தங்காவ் (ஐக்கிய முற்போக்கு கினபாலு அமைப்பின் தலைவர் – உப்கோ), ஃபாரான்கி பூன் மிங் ஃபுங் (டிஏபி) மற்றும் லஹிருல் லத்திகு (அமானா) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

செப்டம்பர் 23-ம் தேதி, பிரதமர் துறை (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) அமைச்சர் மாக்சிமஸ் ஓங்கிளி, அதிகாரப்பூர்வ அரசாங்க இரகசியங்கள் மற்றும் அவை இன்னும் ஆலோசனையில் உள்ளதால், எம்ஏ63-இன் இறுதி அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டிய அவசியமில்லை என்ற அரசாங்கத்தின் நிரந்தர நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

சபாவைச் சார்ந்த ஓர் அமைச்சராக, எம்ஏ63 மதிக்கப்படுவதையும் முழுமையாக செயல்படுத்தப்படுவதையும் மாக்சிமஸ் உறுதி செய்ய வேண்டும் என்று சபா பிஎச் கருதுகிறது.

வெளிப்படைத்தன்மை ஒருபோதும் காணப்படவில்லை

அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவது மலேசியர்கள் எம்ஏ63-இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு என்றும் சபா பிஎச் கருதுகிறது.

“எம்ஏ63-இன் வரலாறு மற்றும் உண்மை தவறான விளக்கங்களால், மலேசியா உருவான 58 வருடங்களுக்குப் பிறகும் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவது ஒரு சவாலாகவே உள்ளது.

“உண்மைகளைக் கூறி, மத்திய அரசு பொறுப்பான அணுகுமுறையை எடுக்க வேண்டிய நேரம் இது.

“பல ஆண்டுகளாகச் சபா மற்றும் சரவாக் உரிமைகளைச் சிதைப்பதில் பல தவறுகள் நடந்துள்ளன,” என்று அவர்கள் கூறினர்.

பி.எச். அரசாங்கமாக மாறியபோது, ​​சபா மற்றும் சரவாக் அரசாங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட 21 கூறுகளில் 17 கூறுகளை, சிறப்பு அமைச்சரவைக் குழு கூட்டம் மூலம் எம்ஏ63-ஐ செயல்படுத்துவதை மதிப்பாய்வு செய்ய கூட்டணி ஒப்புக்கொண்டது.

மீதமுள்ள நான்கு கூறுகள், எண்ணெய் உரிமை மற்றும் பெட்ரோலியப் பணம் செலுத்துதல்; எண்ணெய் தாதுக்கள் மற்றும் எண்ணெய் துறைகள்; பிராந்தியக் கடல் சட்டம் 2012 மற்றும் மாநிலக் கண்டத் திட்டு உரிமைகள் ஆகிய விவகாரங்கள் இன்னும் விவாதத்தில் உள்ளன.