கோவிட் -19 (செப்.26) : உயிரிழப்புகள் 25,000-ஐ தாண்டின

கிதப் (Github) தளத்தில் உள்ள சுகாதார அமைச்சின் தரவு, நேற்று (செப்டம்பர் 25) கோவிட் -19 காரணமாக மொத்தம் 228 இறப்புகளைப் பதிவுசெய்தது, இதுவரையிலான இறப்பு எண்ணிக்கை 25,159-ஆக அதிகரித்துள்ளது.

அந்த எண்ணிக்கையில், 36 பேர் (15.79 விழுக்காடு) மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பே இறந்தனர்.

சிலாங்கூர் 75 இறப்புகளுடன் அதிக எண்ணிக்கையிலான புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது புதிய இறப்புகளில் 32.89 விழுக்காடு ஆகும்.

அதைத் தொடர்ந்து, ஜொகூர் (56), சபா (19), கிளந்தான் (18), கெடா (15), பேராக் (14), சரவாக் (9), பினாங்கு (8), மலாக்கா (4), திரெங்கானு (4), பகாங் (3) மற்றும் கோலாலம்பூர் (3) என மரண எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன.

நெகிரி செம்பிலான், பெர்லிஸ், லாபுவான் மற்றும் புத்ராஜயாவில் புதிய இறப்புகள் இல்லை.

228 இறப்புகளில், 137 கடந்த ஏழு நாட்களில் பதிவானவை.

மற்ற இறப்புகள் ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்தவை, தரவு பின்னடைவு காரணமாக தற்போது பதிவாகியுள்ளன. உண்மையில் ஏப்ரல் மாதத்தில் பல மரணங்கள் நிகழ்ந்தன.

கடந்த 30 நாட்களில், சராசரி தினசரி இறப்பு 332, கடந்த ஏழு நாட்களின் சராசரி இறப்பு 299 ஆகும்.

நேற்றைய நிலவரப்படி, கோவிட் -19 தொற்றின் செயலில் உள்ள நேர்வுகள் 191,434.

முன்பு, சுகாதார அமைச்சு, புதிய நேர்வுகளுடன் இறப்பு புள்ளிவிவரங்களை ஒவ்வொரு மாலையிலும் அறிவித்தது.

ஆனால், தற்போது மரண எண்ணிக்கை நள்ளிரவில் அறிவிக்கப்படுவதால், மலேசியாகினி ஒரு நாள் கழித்து அதனை வெளியிடும்.