மலேசியா-சிங்கப்பூர் எல்லை திறக்கும் செயற்குழுவில் ஜொகூர் – பிரதமர் ஒப்புக்கொண்டார்

மலேசியா-சிங்கப்பூர் எல்லையைத் திறப்பது குறித்து விவாதிக்கும் சிறப்பு குழுவில், ஜொகூரை ஈடுபடுத்த பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒப்புக்கொண்டார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த மாநில வளர்ச்சி குறித்த விளக்க அமர்வைக் கேட்டபின், பிரதமரே இந்த நிலைப்பாட்டை அறிவித்ததாக ஜொகூர் மந்திரி பெசார் ஹஸ்னி முகமது கூறினார்.

“பிரதமர் ஜொகூர் நேரடியாக ஈடுபடுவதை ஒப்புக்கொண்டார், ஏனென்றால் நாங்கள் எல்லை திறப்பு பிரச்சினையை மட்டும் பார்க்கவில்லை.

ஜொகூர் அம்னோ தொடர்பு குழுவுடன் நேற்று நடந்த பிரதமரின் சந்திப்புக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம், “நாங்கள் இதைத்தான் செய்யவுள்ளோம், இதுதான் இப்போது நடக்கிறது,” என்றார்.

அதைத் தவிர, ஜொகூரின் ஈடுபாடு தேவைப்படும் மற்றும் தொடர்ந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் குடிமக்களை அடையாளம் காணும் முயற்சிகள், தடுப்பூசிகள் மற்றும் திருப்பி அனுப்பப்படும் வணிக வாகன ஓட்டுநர்கள் ஆகியவையும் அதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

அக்கூட்டத்தில், எல்லைத் திறப்புக்காக ஜொகூர் மாநிலத்தால் முன்மொழியப்பட்ட செந்தர இயங்குதல் செயல்முறைகளும் (எஸ்.ஓ.பி.) விவாதிக்கப்பட்டதாக ஹஸ்னி சொன்னார்.

அவற்றில், டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் பெறுதல், கோவிட் -19 திரையிடல் மற்றும் எல்லை கடந்த பயணத்திற்கு 48 அல்லது 72 மணி நேரமா என்பது குறித்தும் இரு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

“ஒரே பிரச்சினை என்னவென்றால், சிங்கப்பூரில் நேர்வுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது, எனவே நாங்கள் சமர்ப்பித்த எஸ்.ஓ.பி. பற்றி விவாதிக்க சிங்கப்பூரில் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மாநிலத்திற்கு ஒரு நாள் பணி நிமித்தமாக வருகை மேற்கொண்ட இஸ்மாயில் சப்ரி, ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தரை, இஸ்தானா பாசிர் பெலாங்கியில் சந்தித்தார்.

அதன் பிறகு, அம்னோ தலைவர்கள் மற்றும் ஜொகூர் அம்னோ தொடர்புக் குழுவைச் சந்தித்தார்.

  • பெர்னாமா