சரவாக், அக்டோபரில் கோவிட் -19 தடுப்பூசி ஊட்ட மருந்தளவை நிர்வகிக்கத் தொடங்கும். நாட்டில், இந்த முயற்சியைத் தொடங்கும் முதல் மாநிலம் இதுவாகும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.
சுகாதார அமைச்சு கோவிட் -19 தடுப்பூசி ஊட்ட மருந்தளவை செயல்படுத்துவதற்கான மருத்துவ வழிகாட்டுதல்களைத் தயாரித்து வருவதாகவும், அது 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் தீவிர நோய்த்தொற்று உள்ளவர்கள் மீது கவனம் செலுத்தும் என்றும் கைரி கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, தடுப்பூசி திட்டத்தை முடித்த முதல் மாநிலம் என்பதால் சரவாக் தடுப்பூசி ஊட்ட மருந்தளவு திட்டத்தைத் தொடங்கும் முதல் மாநிலமாக இருக்கும்.
“மருத்துவ வழிகாட்டுதல்களில், நாங்கள் பின்னர் வழங்கும் விஷயங்களில் தடுப்பூசி வகையும் தெரிவிக்கப்படும். அதே அல்லது வேறு வகையான தடுப்பூசியை வழங்கலாமா என்பதை நாங்கள் இன்னும் மதிப்பிட்டு வருகிறோம்,” என்று கூச்சிங், விஸ்மா பாபா மலேசியாவில், இன்று மாநில அரசு பிரதிநிதிகளுடன் தடுப்பூசி மற்றும் தொற்றுநோய் மேலாண்மை குறித்த சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளர் கூட்டத்தில் கைரி இதனைத் தெரிவித்தார்.
சிபுவில், மேடான் மருத்துவமனை அமைக்க சரவாக் அரசாங்கத்திடம் இருந்து தனது தரப்புக்கு விண்ணப்பம் கிடைத்ததாகவும், கொள்கையளவில் அவரது தரப்பு அதற்கு ஒப்புக்கொண்டதாகவும், அது குறித்து மலேசிய ஆயுதப் படைகளுடன் விவாதிப்பதாகவும் கைரி கூறினார்.
அது தவிர, கோவிட் -19 நேர்வுகளை நிர்வகிக்க உதவுவதற்காக, அடுத்த வாரம் 64 கூடுதல் மருத்துவ அதிகாரிகள் சரவாக்கிற்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கைரி தனது தரப்பு ஸ்ரீ அமான் மருத்துவமனையைத் திறப்பதைத் துரிதப்படுத்தும் என்றும், இதனால் கூச்சிங்கில் உள்ள சரவாக் பொது மருத்துவமனையில் சுமை குறையும் என்றும் கூறினார்.
-பெர்னாமா