சிலாங்கூர் மாநிலத் தேசிய இந்திய முஸ்லிம் கூட்டணி (இமான்), பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கம், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நடவடிக்கையை வரவேற்றது.
சிலாங்கூர், இமான் தகவல் தொடர்பு பிரிவு, இது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றும் இந்த நடவடிக்கை நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு புதிய பக்கத்தைத் திறந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் கருதுகிறது.
இந்தச் செயலானது மாட்சிமை தங்கிய மாமன்னரின் அறிவுரைக்கு இணங்க, அனைத்து கட்சிகளும் ஒரு வளமான வழிகாட்டுதலை உள்ளடக்கிய, நிலையான மலேசியாவின் இலக்கை அடைய, எந்தப் பிரச்சனைகளுக்கும் சுமுகமாகத் தீர்வுகாண வேண்டுமென்ற ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த உறுதுணை புரியும் என்று இமான் தகவல் தொடர்பு பிரிவுத் தலைவர் சையத் அரிஃபின் அபு தாஹிர் கூறினார்.
“இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் தனது வெளிப்படைத்தன்மையைக் காட்டியுள்ளது. அதோடுமட்டுமின்றி, அரசியல் கொந்தளிப்புகளைக் குறைப்பதற்கும், நிர்வாக நிலைத்தன்மையை வழங்குவதற்கும் இது பொருத்தமான செயல்.
“இதனால் மக்கள் நலனுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து செயல்களையும் எந்த இடையூறும் இல்லாமல் செய்து முடிக்க முடியும்.
“மேலும், பொருளாதாரப் பிரச்சினைகளோடு இன்னும் போராடி வரும் நாட்டை மீட்பதற்கும், மக்கள் நலனைப் பாதுகாக்கும் பணிகளைத் திறம்படவும் இலாவகமாக நிறைவேற்றவும் இந்தப் புதிய யுக்தி உதவும்,” என்றார் சையத் அரிஃபின்.