மலேசியத் தாய்மார்களுக்கும் அந்நியக் கணவர்களுக்கும், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்குத் தானியங்கி குடியுரிமை வழங்க அனுமதித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கான அரசின் விண்ணப்பத்தை விசாரிக்க, நவம்பர் 15-ஆம் தேதியைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், அரசாங்கத்தின் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், இன்று பிற்பகல் நீதிமன்றத்தின் விசாரணைக்குத் தேதி நிர்ணயிக்கப்பட்டதை வழக்கறிஞர் ஜோசுவா ஆண்ட்ரன் உறுதிப்படுத்தினார்.
“நவம்பர் 15-ஆம் தேதி விசாரணை நடைபெறும்,” என்று வழக்கறிஞர் மலேசியாகினியிடம் கூறினார்.
கடந்த டிசம்பர் 18-ம் தேதி, ஃபேமிலி ஃபாரண்டியர்ஸ் மற்றும் ஆறு மலேசியப் பெண்கள் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி, அக்தர் தாஹிர், அனுமதித்தார்.
செப்டம்பர் 9-ஆம் தேதி, மலேசியாவைச் சேர்ந்த பெற்றோர்களால், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்குத் தானாகவே மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் என்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில் அரசு மட்டுமே பிரதிவாதியாக இருந்தது.
அக்தர் தனது தீர்ப்பில், வெளிநாட்டு ஆண்களைத் திருமணம் செய்யும் மலேசியப் பெண்களுக்கும் வெளிநாட்டு பெண்களைத் திருமணம் செய்யும் மலேசிய ஆண்களுக்கும் அதே உரிமைகள் உண்டு, வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதிகள் இந்த விவகாரம் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 8 (2)-க்கு இணங்க, கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 14 (1) (b) உடன் இணைந்து, பகுதி (1) (b) கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு II- இன், இரண்டாவது அட்டவணையுடன் முரண்படவில்லை என்று அவர் கூறினார்.
பொருந்தும் அனைத்து சட்டங்களும், குடியுரிமை வழங்குவதில் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது என்றும் அக்தர் தீர்ப்பளித்தார்.
உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஜைனுதீன், செப்டம்பர் 22-ம் தேதி, மக்களவையில் விவாதத்தை முடித்தபோது, அரசாங்கம் மேல்முறையீடு செய்ததாகவும், அரசியலமைப்பு திருத்தத்திற்காகக் காத்திருக்கும்போது உயர் நீதிமன்றத்தின் முடிவை ஒத்திவைப்பதாகவும் கூறினார்.