பூமிபுத்ரா சமபங்கு திட்டம் : மற்ற மலேசியர்களுக்கு நியாயமற்றது – சையத் சாதிக்

நாடாளுமன்றம் | சையத் சதிக் சையது அப்துல் இரஹ்மான் மற்ற மலேசியர்களை ஓரங்கட்டி, பூமிபுத்ராக்களுக்கான பங்குகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

45.5 விழுக்காடு பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பிய சையத் சதிக், இந்த நடவடிக்கை பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு நியாயமற்றது என்று கூறினார்.

காரணம், வெளிநாட்டினருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

நேற்று பிரதமரின் உரையில், மலேசியர் அல்லாதவர்களின் பங்கு (45%) என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.

“ஆனால், பூமிபுத்ராக்களின் பங்குகளை அதிகரிப்பதற்கான தீர்வு, பூமிபுத்ரா அல்லாதவர்களின் பங்கை எடுத்து பூமிபுத்ராக்களுக்குக் கொடுக்க வேண்டும்.

“இதில் நியாயம் இருக்கிறதா? நாம் மலேசியர்களை விட வெளிநாட்டவர்களை அதிகம் மதிக்கிறோம், இவர்கள் மலாய்க்காரர்களாகவும் முஸ்லிம்களாகவும் பிறக்கவில்லை எனும் ஒரே காரணத்திற்காக,” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

நேற்று, 12-வது மலேசியத் திட்டத்தை முன்வைத்த இஸ்மாயில் சப்ரி யாகோப், 2019-ம் ஆண்டு வரையில் பூமிபுத்ரா நிறுவனங்களின் பங்களிப்பு 17.2 விழுக்காடு, பூமிபுத்ரா அல்லாதவர்கள் 25 விழுக்காடு, வெளிநாட்டு நிறுவனங்கள் 45.5 விழுக்காடு மற்றும் ‘நியமனப் பங்குகள்’ 12.3 விழுக்காடு என்றார்.

பூமிபுத்ராக்களால் நடத்தப்படும் சர்வதேச ஒருங்கிணைந்த தளவாடச் சேவைகளில் (ஐ.ஐ.எல்.எஸ்.) ஈடுபடும் உள்ளூர் நிறுவனங்களின் 51 விழுக்காடு பங்குகளுக்கான திட்டங்களுக்கு மத்தியில், கடந்த வாரம் முதல் பூமிபுத்ரா சமபங்கு உரிமை பிரச்சினை மீண்டும் எழுத்தது.

இது மலேசியாவின் சரக்கு அனுப்புபவர்கள் கூட்டமைப்பிலிருந்து (ஃப்.எம்.ஃப்.ஃப்.) எதிர்ப்புகளைத் தூண்டியது. மற்றவற்றுடன், தற்போது பூமிபுத்ரா நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வாங்க விரும்புவதைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என்றது அது.

அதே விதிமுறைகள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பதால் இந்த விதிகள் ஐஐஎல்எஸ்-இல் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிறுவனங்களைக் கடினமான நிலையில் வைக்கும் என்றும் அது கூறியது.

இன்று, நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், கட்டுப்பாடு அடுத்த ஆண்டின் இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பெனெராஜூ எஜெண்டா பூமிபுத்ரா (தெராஜு) தொடர்ந்து அதை மதிப்பீடு செய்ய முடியும் என்றும் கூறினார்.

இந்தத் திட்டம் பணக்காரர்களுக்கும் “குரோனிகளுக்கும்” மட்டுமே பயனளிக்கும், ஏழை பூமிபுத்திராக்களுக்கு அல்ல என்றார் சையத் சாதிக்.