கோவிட் -19 தொற்றைத் தொடர்ந்து மக்கள், குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக பணியாற்றுவது அல்லது நீண்ட காலத்திற்கு அமைச்சராக இருப்பதன் மூலம் அரசியல்வாதிகள் பெறும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பற்றி சையத் சதிக் மக்களவையில் பேசினார்.
ஒரு காலத்தில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய சையத் சதிக், ஓர் அமைச்சரவை உறுப்பினருக்கு மாதம் 50,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது என்றார்.
அது தவிர, புத்ராஜெயாவில் அமைச்சருக்கு ஒரு சொகுசு வீடு, ஒரு கார், ஒரு ஓட்டுநர், விற்கப்பட்டால் நூறாயிரக்கணக்கான மதிப்புள்ள வாகன எண் தட்டு, நம் நாட்டிற்குச் சொகுசு கார்களைக் கொண்டுவருவதற்கான இறக்குமதி உரிமம் (ஏபி) மற்றும் புத்ராஜெயாவில் ஒரு துண்டு நிலம் ஆகியவையும் வழங்கபப்டுகிறது.
அமைச்சர்கள் உணவு செலவுகளையும், விடுப்பு கொடுப்பனவுகளையும் கோரலாம். திருமணமானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் RM 100,000 முதல் RM 200,000 வரை விடுமுறைக்குச் செல்ல பெறலாம் என்று அவர் கூறினார்.
“நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை, அதனால் என் கொடுப்பனவு அவ்வளவு அதிகமாக இல்லை,” என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, ஓர் அமைச்சர் இராஜினாமா செய்ய விரும்பும் போது, அந்த அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தின் அடிப்படையில் சம்பளம் பெறுகிறார்கள் என்று சையத் சாதிக் சொன்னார்.
“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 4 முதல் 5 முறை பதவி வகித்திருந்தால், அவர்கள் ஒரு நாள் அமைச்சராகப் பணியாற்றினாலும், அவர்களின் ஊதியம் 1 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டுகிறது,” என்று அவர் கூறினார்.
அரசாங்கம் ஏற்கனவே இரண்டு முறை மாறிவிட்டதால், சில அமைச்சர்கள் இராஜினாமா செய்து, பின்னர் ஓரிரு முறை மீண்டும் நியமிக்கப்பட்டதால், இந்த வெகுமதிகளைச் செலுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று சதிக் கூறினார்.
“வெகுமதி ஒரு முறை மட்டுமே செலுத்தப்படுகிறதா, அல்லது அவர்கள் வெளியேறும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ரிம 1 மில்லியன் வழங்கப்படுகிறதா; பின்னர் அவர்கள் மீண்டும் நியமனம் செய்யப்பட்டு மீண்டும் வெளியேறும்போது, மற்றொரு ரிம 1 மில்லியன் கிடைக்குமா; நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது அவர்களுக்கு RM1 மில்லியன் மீண்டும் கொடுக்கப்படுமா என்பதைப் புத்ராஜெயா விளக்க வேண்டும்.
“இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அமைச்சராக இருப்பதற்கான சம்பளத்தைத் தவிர, அரசியல்வாதிகள் பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் ஓய்வூதியத்தை அனுபவிக்க முடியும் என்று சதிக் கூறினார்.
ஓர் அரசியல்வாதி, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர் அல்லது அமைச்சர், செனட்டர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்… அவர்கள் ஒவ்வொரு பதவிக்கும் ஓய்வூதியம் பெறுகிறார்கள்.
“நீங்கள் இந்த அனைத்து ஓய்வூதியங்களையும் இணைத்தால், அது மாதத்திற்கு RM100,000-ஐ தாண்டலாம்.
“இதனால்தான் பல எம்பிக்கள் பல ஆண்டுகள் பணியாற்றினாலும் இராஜினாமா செய்ய விரும்புவதில்லை,” என்று அவர் கூறினார்.
அரசியல்வாதிகளின் சம்பளம் மற்றும் அரசியல் நிதிகளை மறுஆய்வு செய்ய, அரசாங்கம் ஒரு சிறப்பு குழுவை அமைக்க சதிக் பரிந்துரைத்தார் – காரணம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை நிதி ரீதியாக நிர்வகிக்க முடியும்.
“இது விவாதம் செய்யப்பட வேண்டும். மக்கள் வயிற்றைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம், ஆனால் இங்கு நாடாளுமன்றத்தில் அல்லது அரசாங்கத்தில் நாம் மிகவும் இலாபகரமான சம்பளத்தைப் பெறுகிறோம்.
“இது மக்களுக்கு நியாயமானது அல்ல,” என்று அவர் கூறினார்.